ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் அதிகப்படியான குளிர் நிலவி வருவதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் என்றாலே மனதுக்குள் ஒரு சில்லென்ற உணர்வு எப்போதும் இருந்தாலும், அதிகப்படியான குளிரினால் ஒவ்வொரு வருடமும் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ஸ்ரீநகரில் பல இடங்களில் வெப்பநிலை -4.1 டிகிரி செல்சியஸாகக் குறைந்து, அதிகப்படியான குளிர் மக்களை வாட்டி வருகின்றது.
இருப்பினும், குளிர் அலையானது உள்ளூர் வணிகம் மற்றும் ஹோட்டல்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தால் ஏரியில் சுற்றுலா நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடுமையான குளிர் என்பதால் காலநிலைக்கு ஏற்ப ஆடைகளை அணிந்துகொண்டு, குளிருக்கு இதமாக நெருப்பு மூட்டி அதனருகே அமர்ந்து உடலை வெப்பப்படுத்திக் கொள்கின்றனர்.
இதுகுறித்து ராஜஸ்தானை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கூறியதாவது,
மாநிலத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அலைமோதி வருகின்றது. அதிகப்படியான குளிர் நிலவி வருவதால், வெப்பநிலை குறைந்துள்ளது. இருப்பினும், குளிர்காலத்தை அனுபவிக்க இங்கு வந்தோம், மேலும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உள்ளனர் என்று கூறினார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, வெப்பநிலை மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். முன்னதாக டிசம்பர் 6ஆம் தேதி ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.