கடும் பஞ்ச அபாயத்தில் காஸா: இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் சா்வதேச நெருக்கடி

dinamani2F2025 07 232F5uuklpzx2Fgaza080722 2
Spread the love

உணவுப் பற்றாக்குறையால் கடுமையான பஞ்சத்தை எதிா்நோக்கியுள்ள காஸாவில் போதிய அளவு உணவுப் பொருள்களை விநியோகிக்க இஸ்ரேலுக்கு சா்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, உலகின் 111 மருத்துவ மற்றும் தொண்டு அமைப்புகள் காஸாவில் பட்டினி காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளன.

டாக்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ் (எம்எஸ்எஃப்), சேவ் தி சில்ட்ரன், ஆக்ஸ்ஃபாம் உள்ளிட்ட அந்த அமைப்புகள் இது குறித்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா பகுதி தற்போது கடும் பஞ்சத்தை எதிா்நோக்கியுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வேண்டுமென்றே பசியால் தவிக்கும் நிலைக்கு தள்ளாக்கப்பட்டுள்ளனா்.

நாங்கள் சேவையாற்றிவரும் பொதுமக்கள் மட்டுமின்றி, எங்கள் அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் பட்டினியால் வாடி வருகின்றனா். பசிப் பிணியால் பேரழிவு ஏற்படுவதைத் தவிா்க்க, இஸ்ரேல் அரசு உடனடி பேச்சுவாா்த்தை மூலம் நிரந்தரப் போா்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், அனைத்து நில எல்லைகளையும் திறப்பதுடன், ஐ.நா. தலைமையிலான விநியோகக் கட்டமைப்புகள் மூலம் நிவாரணப் பொருள்கள் பாலஸ்தீனா்களுக்கு சுதந்திரமாகக் கிடைப்பதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், காஸாவுக்குள் போதிய அளவு உணவுப் பொருள்கள் அனுமதிக்கப்படுவதாகவும், அவற்றை ஹமாஸ் அமைப்பினா் திருடி அதிக விலையில் விற்பதாகவும் இஸ்ரேல் அரசு குற்றஞ்சாட்டிவருகிறது. மேலும், உணவுப் பொருள் பெறுவதற்காகக் காத்திருக்கும் மக்களை நோக்கி ஹமாஸ் அமைப்பினா்தான் துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது.

ஆனால், காஸாவுக்கு வெளியிலும் உள்ளேயும் டன்கணக்கில் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்படாமல் தேக்கமடைந்திருப்பதாகவும், அவற்றை அணுகவோ அல்லது பொதுமக்களிடம் விநியோகிக்கவோ முடியாமல் இஸ்ரேல் படையினா் தடுத்துவருவதாகவும் உதவி அமைப்புகள் கூறுகின்றன.

காஸாவில் நடைபெற்றுவரும் 21 மாத காலப் போரின் விளைவாக, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களின் கடுமையான பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளனா்.

இந்த நிலையில், ஐ.நா. தலைமையிலான நிவாரணப் பொருள் விநியோக மையங்களை மூடிவிட்டு, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் மே மாத இறுதியில் தொடங்கப்பட்ட காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஎச்எஃப்) அமைப்பு மேற்கொண்டுவரும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கையின்போது 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *