கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா எதிர்ப்பு | GST on shop rent tn Federation of Traders Associations opposes

1340517.jpg
Spread the love

சென்னை: கடை வாடகை மீதான ஜிஎஸ்டி வரியை முறையாக மறு ஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்திய நாளில் இருந்து வணிகர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அந்தந்த சூழ்நிலைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்து கோரிக்கை மனுக்களை அளித்து, பலவிதமான பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது தீர்வுகண்டு வந்திருக்கிறது.

வணிகர் செலுத்தும் வாடகைக்கும், வணிக கட்டிடங்களுக்கான வாடகை பெறுபவருக்கும் ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக உணவக கட்டிடங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை உணவக வணிகர்கள் 2017-ல் இருந்து செலுத்தி வருகிறார்கள். அதை திரும்பப்பெற நிதியமைச்சருக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இணக்க வரி செலுத்துகின்ற வணிகர்கள் இதுநாள் வரை இந்த நடைமுறையை பின்பற்றி வந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி. வரிவிதிப்பு வரம்பு என்பது ஆண்டு வருமானம் 20 லட்சத்துக்கு குறைவாக வாடகை வருமானம் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதைப்போலவே 40 லட்சம் வரை விற்று வரவு செய்கின்ற வணிகர்களுக்கும் ஜிஎஸ்டி பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த நடைமுறையில் கட்டிட உரிமையாளரும் வணிகம் செய்பவரும் வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. தற்போது 10-10-2024 அன்று முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு எண்.9/2024 அறிவிப்பின்படி சிறு குறு மற்றும் நடுத்தர வணிகர்களும் வாடகை மீதான ஜிஎஸ்டி சேவை வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்கிற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரி சட்டங்கள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்த நாளில் இருந்து 907 சட்டதிருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு வரி விதிப்பிலேயே எண்ணற்ற குளறுபடிகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், இச்சட்ட நடைமுறைகளை படித்து தெரிந்து ஆய்வு செய்து பின்பற்றுவதற்கு கல்வி பின்புலம் கொண்டவர்களுக்கே மிகக் கடினமான ஒன்று என்பதோடு ஜிஎஸ்டி இணையதளமும் அவ்வப்பொழுது சேவை நடைமுறையில் குறைபாடுகள் இருப்பது தெரிய வருகிறது. ஒட்டுமொத்தமாக வணிக சேவை என்பது பொதுமக்கள் நலன் சார்ந்த ஒன்று என்பதோடு அரசுக்கு ஊதியம் இன்றி வணிகர் உழைப்பால் அரசு வருவாய் ஈட்டித்தரும் முதலாளிகள் மட்டுமல்ல உழைப்பாளிகளும் என்பதை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி மாற்றங்கள் கொண்டு வரும்போதும் வரி சம்பந்தமாக முடிவுகள் எடுக்கும் முன்னரும் வணிகர்கள் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளோடு கலந்தாய்வு செய்து பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீண்ட கால கோரிக்கை என்பதை இங்கே நினைவு கூறுகிறோம்.

தற்போது அறிவிக்கப்பட்ட வாடகை மீதான சேவை வரியை முறையாக மறு ஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகிறது.

உரிய தீர்வுகள் எட்டப்படாவிடில் இணைப்புச் சங்கங்கள் மற்றும் ஆட்சிமன்ற குழு ஒப்புதல் பெற்று கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *