“கட்சிக்காக பாடுபட்டோருக்கு மேயர் பதவியை தரவில்லை” – கோவை திமுக பெண் கவுன்சிலர் ஆதங்கம் | DMK woman councilor comments on Coimbatore Mayor Selection

1291272.jpg
Spread the love

கோவை: “கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு மேயர் பதவியைத் தரவில்லை,” என இன்று நடைபெற்ற கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசினார்.

100 வார்டுகளைக் கொண்ட கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்ய, மறைமுகத் தேர்தல் இன்று (ஆக.6) நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.5) நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மேயர் வேட்பாளராக 29-வது வார்டு திமுக கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு அறிவித்தார்.

மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதற்கான சான்றிதழை அமைச்சர்கள் நேரு, முத்துசாமியிடம் காட்டி வாழ்த்து பெற்ற ரங்கநாயகி.

அதைத் தொடர்ந்து மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடந்தது. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் நடைபெறும், விக்டோரியா அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அறிவித்தபடி, இன்று காலை திமுக மேயர் வேட்பாளர் ரங்கநாயகி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கான அரை மணி நேரத்தில் வேறு எந்த வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவித்தார்.

அதைத் தொடரந்து ரங்கநாயகி மேயருக்கான அங்கியை அணிந்து கொண்டு மேடைக்கு வந்தார். அவரிடம் அமைச்சர் கே.என்.நேரு செங்கோல் வழங்கினார். தொடர்ந்து மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான மா.சிவகுரு பிரபாகரன் அவருக்கு மேயராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். உறுதிமொழி வாசித்து ரங்கநாயகி மேயராக பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில், ராஜினாமா செய்த முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமாரும் கலந்து கொண்டார். அதேசமயம், அதிமுகவைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்களும் கலந்து கொள்ளவில்லை.

சீனியர் கவுன்சிலர்கள் ஆதங்கம்: முன்னதாக, இன்று காலை பெரியகடைவீதியில் உள்ள திருமண மண்டபத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தனர். இதில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தினர். அப்போது பெண் கவுன்சிலர் ஒருவர் எழுந்து, “இத்தனை ஆண்டுகள் கட்சிக்கு பாடுபட்டவர்கள், கட்சிக்காக பணம் செலவு செய்தவர்களுக்கு மேயர் பதவியை தரவில்லை” என ஆதங்கத்துடன் கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. அமைச்சர்களும் சக கவுன்சிலர்களும் அவரை சமாதானப்படுத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *