மதுரை: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களை உயர் நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்காமல் முடித்துவைத்தது. இதையடுத்து, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான தடை நீங்கியுள்ளது.
மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றவும், கொடிக் கம்பங்கள் வைப்பதாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற்று பட்டா இடங்களில் வைக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.
இந்த உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டன.
இந்நிலையில், கொடிக் கம்பங்களை அகற்றுவதில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்கக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.விஜயகுமார், எஸ்.சவுந்தர் அமர்வு விசாரித்து, “அனைத்து கொடிக் கம்பங்களையும் ஒரே இடத்தில் நிறுவலாம். இது தொடர்பாக கட்சிகள், அமைப்புகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
அதுவரை கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதையடுத்து, திமுக, அதிமுக, மதிமுக, திக, விடுதலை சிறுத்தைகள், தவெக, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், கொடிக் கம்பங்களை அகற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கதிரவன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் “19 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த 100 சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 90 சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் 31 சதவீத கொடிக்கம்பங்கள் அகறப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “உயர் நீதிமன்றம் அனைத்து தரப்பையும் முழுமையாக ஆராய்ந்துதான் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுக்குச் சொந்தமான இடத்தை அரசியல் லாபத்துக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கொடிக் கம்பம் வழக்கின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை நீதிபதி சுப்பிரமணியம் தலைமையிலான மதுரை உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வில் நேற்று நடைபெற்றது. பின்னர் நீதிபதிகள், “கொடிக் கம்பம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்துள்ளது.
எனவே, இந்த மேல்முறையீட்டு மனு மீது இந்த அமர்வு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. தேவையெனில் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன” என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கான தடை நீங்கியுள்ளது.