“கட்சியில் இருப்பதும், இல்லாததும் ஒன்றுதான்” – திருச்சி திமுகவினர் ஆதங்கம் | Trichy DMK members who expressed their concern on party

1304888.jpg
Spread the love

திருச்சி: திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மேற்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வட்டச் செயலாளர்கள், “கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. கட்சியிலிருந்து என்ன பயன்? இந்தக் கட்சியில் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்” என தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

திருச்சி மேற்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப்.2) நடைபெற்றது. அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 22 வட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். பெரும்பாலான வட்டச் செயலாளர்கள் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் தங்களுக்கு எந்த பலனுமில்லை என்று பகிரங்கமாக ஆதங்கத்தைக் கொட்டியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

27-வது வட்டச் செயலாளர் காளை பேசுகையில், “அமைச்சர் நேருவின் திருச்சி மேற்குத் தொகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர்கள் அமைச்சரை சந்திக்க முடிவதில்லை. தேர்தலில் 10 வாக்குகள் கூட வாங்கித் தர முடியாத தொகுதிக்கு அப்பாற்பட்டவர்கள் அமைச்சருடனேயே இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தான் 2 ஆயிரம் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிக் கொடுப்போம். ஆனால், எங்களுக்கு மரியாதை கிடையாது. திருச்சியில் உள்ள 65 வட்டச் செயலாளர்களில் முதன் முதலில் தலைவர் கருணாநிதிக்கு சிலை வைத்தவன் தான் இந்த காளை.

27வது வட்டச் செயலாளர் காளையின் பேச்சை ரசித்துக் கேட்ட திமுக நிர்வாகிகள்

தலைவர் ஸ்டாலின் வந்தால், என்னை அழைத்துச் சென்று, ‘65 வட்டச் செயலாளரில் இவர் தான் தலைவருக்கு சிலை வைத்தார்’ என்றுக் கூறி ஒரு துண்டு கொடுக்கவிடுங்கள் என்று மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளரிடம் தெரிவித்தேன். முதல்வர் திருச்சிக்கு எத்தனையோ முறை வந்து சென்றுவிட்டார். இதுவரை அழைத்துச் செல்லவில்லை. இனியும் செய்ய மாட்டார்கள். வேலை வாங்க மட்டும் தான் காளை.

முன்னாள் பகுதிச் செயலாளர் காஜாமலை விஜய், தேர்தலின்போது, ‘எல்லா பகுதியையும் விட நம்ம வார்டில் தான் கூட்டம் அதிகம் காட்ட வேண்டும்’ என்பார். நானும் அவரை நம்பி கூட்டத்தை அழைத்து வருவேன். ‘எல்லா வார்டிலும் கூட்டம் குறைவு நம்ம வார்டில் சிறப்பாக செய்துவிட்டாய். இது உன் கை இல்லை கால்’ என்று கையைப் பிடித்து நன்றி கூறுவார். ‘நீ எங்க நீட்டுறியோ அங்கே கையெழுத்துப் போடச் சொல்றேன்’ என்பார். ஆனால், இதுவரை எனக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் அவர், நல்ல முறையில் தான் இருக்கிறார். கஷ்டப்படுறகிறவர்கள், உழைக்கிறர்களுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். யாரென்றே தெரியாதவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படுகிறது; வேலை தரப்படுகிறது.

5 ஆண்டுக்கு முன் எனது அண்ணன் இறந்தபோது, துக்கம் விசாரிக்க வந்த அப்போதைய எம்எல்ஏ நேரு, ‘ஆட்சிக்கு வந்ததும் உனது அண்ணன் மகனுக்கு சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருகிறேன்’ என்று கூறினார். 5 வருடம் ஆகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. கட்சிக்காரனுக்கே செய்யமுடியவில்லை. நாங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். முதல்வரிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்ய வேண்டும். எனது அண்ணன் மகனுக்கு வேலை வாங்கித் தரவேண்டும்” என்றார். அவர் பேசி முடித்து வந்ததும், மேடையிலிருந்த முன்னாள் பகுதிச் செயலாளர் காஜாமலை விஜய், காளையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பேசிய 62-வது வட்டச் செயலாளர் ரவி, “எனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள். இதுவரை செய்யவில்லை. வட்டச் செயலாளர்களுக்கு அவ்வளவு தான் மரியாதையா? இந்தக் கட்சியில் இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்” என்றார்.

உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் கே.என்.நேரு, கையில் டிரிப்ஸ் போடப்பட்ட ஊசியுடன் மேடைக்கு வந்தார். அவர் பேசுகையில், “நான் தாமதமாக வந்ததால், வட்டச் செயலாளர்கள் என்ன பேசினார்கள் எனத் தெரியாது. நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதை ஊகித்துக் கொண்டிருக்கிறேன். கட்சி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு ஆகியும் எங்களுக்கு வேலை வாங்கித் தாருங்கள் என்று கோரிக்கை வைத்திருப்பீர்கள் என்பதை அறிவேன்.

ஆட்சிக்கு வந்தபோது கரோனா பெருந்தொற்று, அதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, அரசில் யாரையும் வேலைக்கு எடுக்க வேண்டாம் என்று சொல்லும் நிலை. இன்று அந்த நிலை மாறி உள்ளது. உங்கள் தேவையை அறிவேன். கட்சியினருக்கு உரிய முறையில் வாய்ப்பு பெற்றுத் தரப்படும். காலியாக உள்ள 7 வட்டச் செயலாளர் பதவி மீண்டும் நிரப்பப்படும்.

லால்குடி தொகுதியிலிருந்த நான், 2006-ல் திருச்சி மேற்கு தொகுதிக்கு வந்தபோது, என்னை வெற்றிபெற வைத்தீர்கள்.

திருச்சி மாநகர் இன்று எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது உங்களுக்குத் தெரியும். லால்குடி தொகுதியை விட்டு வந்துவிட்டேன். இனி எனக்கு போறதுக்கு வேறு இடம் இல்லை. உங்களை நம்பி நான் இங்கு தான் இருந்தாக வேண்டும். அட்டை மாதிரி பிடித்துக்கொண்டு இருக்கிறேன் என்று எண்ண வேண்டாம். உங்கள் நன்றியை, உழைப்பை என்றும் மறவாமல் இருப்பேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *