”கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் எனச் சொல்லி பலர் வந்துள்ளனர்” – திருமாவளவன்

Spread the love

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “பா.ஜ.க ஒவ்வொரு சமூகத்தையும் தனித்தனியாக மதம் சார்ந்த முறையில் அணுகுகிறார்கள். அவர்கள் மதுரையில் நெசவாளர்களுக்காகப் போராடவில்லை, தொழில் வளத்தைக் கொண்டு வர போராடவில்லை.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாடு
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாடு

எய்ம்ஸ் மருத்துவமனைக்காகப் போராடவில்லை, கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள். மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு ஒருங்கிணைக்கப் பார்க்கிறார்கள். ஓ.பி.சி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ரத யாத்திரை நடத்தினார்கள்.

பா.ஜ.க இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒரு கட்சி. இந்தத் தேர்தலில் எப்படி வெல்வது? ஆட்சி அதிகாரத்தை எப்படி தக்க வைப்பது என்றுதான் பார்க்கிறார்கள். கூடுதலாக இடங்கள் வேண்டாமா என்று எங்களைப் பார்த்து கேட்கிறார்கள்.

இடதுசாரிகள் கூட்டணியில் வி.சி.க-விற்கு 4 இடங்கள், 5 இடங்கள் தருகிறார்கள். இது போதுமா என்று நம்மிடம் ஆசை காட்டுகிறார்கள். கூடுதலாக வெற்றி பெறலாமே என இப்படி தற்காலிக வெற்றிக்கு வலதுசாரித் தலைவர்களை ஓ.பி.சி தலைவர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். அ.தி.மு.க அந்தத் துரோகத்தைச் செய்கிறது. அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் துரோகத்தைச் செய்கின்றன.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

தமிழகத்தில்தான் அவர்களால் காலூன்ற முடியாத நிலை இருந்தது. பா.ஜ.கவுடன் சேர்ந்தால் அவமானம் என்ற உளவியலைக் கட்டமைத்திருந்தோம். அதனை மெல்ல மெல்ல நீர்த்துப்போகும் நிலை இருந்தது. இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையில், இடதுசாரிகள் மிகவும் ஒருங்கிணைத்து இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிஸ்ட் கட்சியுடன் நிற்பது அல்ல. அது விரிவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று. திராவிட இயக்கங்களையும், அம்பேத்கர் இயக்கங்களையும் இணைத்து செயல்பட வேண்டும்.

இடதுசாரி தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும். இடதுசாரி அரசியலை மக்களிடம் எந்த அளவு கொண்டு சென்றோம் என்பதில்தான் நம் வெற்றி உள்ளது. கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் எனக் கூறிக் கொண்டு இன்று பல பேர் வந்துள்ளனர். அவர்களுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்களும் அவர்களை உயர்த்திப் பிடிக்கின்றன. அதுதான் காற்றடிக்கும் திசை எனப் பலபேர் தாவுகிறார்கள். அந்தச் சதி அரசியலை முறியடிக்க வேண்டும்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

அது வலதுசாரி அரசியலுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கையாகவே இருக்கும். தி.மு.க மீதும் தி.மு.க அரசியல் மீதும் எங்களுக்கு விமர்சனம் உண்டு. அந்த விமர்சனத்தோடுதான் கூட்டணியை, உறவை, நட்பைத் தொடர்கிறோம். ஆனால், வலதுசாரிகளுக்கு இங்கு சிவப்பு கம்பளம் விரிக்க முடியாது. வலதுசாரிகளுக்கு துணை போகிற கும்பலை ஆதரிக்க முடியாது. வலதுசாரி அரசியலை வீழ்த்தும் வரை ஓய்ந்துவிடக்கூடாது” என்றார்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *