தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில் நகரத்தில் வசிப்போர் அவரவரின் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதற்காக பேருந்துகளும், ரயில்களும் கூட்ட நெரிசலால் அலைமோதும். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்களை முன்பதிவு செய்வோரும் உண்டு. ஆனால், வேலை, விடுமுறை குறித்து சரியாகத் திட்டமிடாதவர்கள் கடைசி நேரத்தில் கிடைக்கும் பேருந்துகளில் பயணம் செய்யும் சூழல் ஏற்படும்.
இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ளூம் தனியார் ஆம்னிப் பேருந்துகள் டிக்கெட் விலையை ஏகபோகத்துக்கு உயர்த்திவிடுவதும், இதை ஒவ்வொரு பண்டிகையின்போதும் அரசு தலையிட்டு சரிசெய்ய முயற்சிப்பதும், ஒருகட்டத்தில் அது பயனில்லாமல் முடிவதும் வழமையாகிவிட்டது.

இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், “பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.