கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் சமீபத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். இத்திருமணத்தில் மகேந்திர சிங் தோனி பேசுகையில் நகைச்சுவையாக பேசினார். அவர் மணமக்களுக்கு வழங்கிய அறிவுரையில், “திருமணம் என்பது மிகவும் நல்ல விஷயம். நீங்கள் அதைச் செய்ய அவசரப்படுகிறீர்கள். சிலர் நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள். மணமகனும் அவர்களில் ஒருவர்,” என்று தோனி கூறினார். அப்போது அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.
தொடர்ந்து பேசிய தோனி, “எனக்கும் தவறுதலாக புரிதல் இருக்கிறது. எனது மனைவி இதிலிருந்து மாறுபட்டவர் என்று நினைக்கவேண்டாம். இங்கு இருக்கும் அனைத்து கணவன்மார்களுக்கும் அதே நிலைதான்,” என்றார்.
மணமகள் பக்கம் திரும்பிய தோனி, “கணவன் கோபமாக இருக்கும்போது எதுவும் சொல்லாதீர்கள். 5 நிமிடத்தில் அமைதியாகிவிடுவார். நமது சக்தி நமக்கு தெரியும்”‘என்றார்.
சமூக வலைத்தள பக்கத்தில் வெளியான வீடியோ புதியதா அல்லது பழையதா என்று தெரியவில்லை. ஆனால் தோனி மணமக்களுக்கு கொடுத்திருக்கும் அறிவுரை வைரலாகி இருக்கிறது.
மீண்டும் இந்திய அணியில் ஒரு தினப்போட்டிக்கு திரும்பி இருக்கும் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்தும் தோனியின் வீட்டிற்கு சென்று இருந்தனர். அவர்களுக்கு தோனி விருந்தளித்து உபசரித்தார். அதன் பிறகு கோலி மற்றும் தோனி காரில் நீண்ட ஒரு பயணம் செய்தனர்.
சொந்த ஊரான ராஞ்சியில் இயற்கை விவசாயம் செய்யும் மகேந்திர சிங் தோனி அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். கடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. எனவே இம்முறை அந்த வீழ்ச்சியில் இருந்து சென்னை அணியை மீட்டெடுக்க தோனி தயாராகி வருகிறார். அதோடு சமீபத்தில் ட்ரோன்களை இயக்குவதற்கான பைலட் பயிற்சியையும் முடித்து இருக்கிறார்.