பிஹார் தேர்தல் முடிவுகள் கதர் கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதால் அந்தக் கட்சி தங்களுடன் கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாம் பனையூர் தலைவரின் கட்சி. பிஹார் தேர்தல் முடிவுகள் வரட்டும் என்பதற்காகவே, வேட்பாளர் தேர்வு, மாற்றுக் கட்சியினர் சேர்ப்பு நிகழ்வுகளை தள்ளிப் போட்டிருந்த தலைவர், தற்போது அதற்கான வேலைகளை வேகப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம்.
அதன்படி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் வேலைகளை தொடங்கி இருக்கிறார்கள் பனையூர் கட்சியின் பொறுப்பாளர்கள். இந்த விஷயத்தில் ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களின் ஜாதகங்கள் முதற்கொண்டு வாங்கி சரிபார்த்த பிறகே பட்டியலில் சேர்க்கப் போகிறார்களாம். பட்டியல் தொடர்பான முதல்கட்ட பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டிருக்கும் தலைவர், டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து, மாற்றுக் கட்சிகளில் இருந்து வருவோரை கழகத்தில் சேர்க்கும் வைபவங்களை நடத்தப் போகிறாராம்.