சென்னை: மயிலாப்பூர் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் முறைகேடாக தனி நபர்களுக்கு விற்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி, அவற்றை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சென்னை சூளைமேட்டை சேர்ந்த எல்சியஸ் ஃபெர்னாண்டோ என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை மயிலாப்பூர் கத்தோலிக்க திருச்சபைக்கு பாத்தியப்பட்ட பரங்கிமலை புனித தோமையார் தேவாலயத்துக்கு மதம் தொடர்பான சேவைக்காக கடந்த 1915-ம் ஆண்டில் 75 ஏக்கர் நிலம் இனாமாக வழங்கப்பட்டது. இனாம் நிலம் என்பதால் இதை தனி நபர்களுக்கு விற்க முடியாது. ஆனால், முறைகேடாக தனிநபர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
இதே திருச்சபைக்கு சொந்தமான தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் உள்ள 53 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலமும் தனி நபர்களுக்கு முறைகேடாக விற்கப்பட்டு, அந்த நிலங்கள் தற்போது வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 1.55 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தேவாலயம் ஆக்கிரமித்துள்ளது.
திருச்சபை நிர்வாகிகள் சிலர் கூட்டணி அமைத்து முறைகேடாக விற்ற நிலங்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பங்குத் தந்தைகள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த நிலங்களை மீட்கவும் தமிழக அரசு மற்றும் மயிலாப்பூர் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜராகி வாதிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு, கத்தோலிக்க திருச்சபை நிர்வாகம், சம்பந்தப்பட்ட பங்குத் தந்தைகள் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.