கனக சபை தரிசனம்: தீட்சிதர்கள் நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு | High Court has ordered the Hindu Religious and Endowments Department to investigate and submit a report

1371440
Spread the love

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபையில் பக்தர்கள் தரிசனத்துக்காக தீட்சிதர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில், கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என முடிவெடுத்து, கடந்த மார்ச் முதல் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள், கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தீட்சிதர்கள் தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய முடியாது என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து திரும்ப மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமிக்க, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த குழுவினர், வார நாள், வார விடுமுறை நாள், விழா நாள் என மூன்று நாட்கள் நேரில் ஆய்வு செய்து, தீட்சிதர்களின் தற்போதைய திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா? அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? அல்லது பக்தர்கள் இடையூறுகளை சந்திக்கிறார்களா? என புகைப்பட ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *