கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளாா்.
அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பல்வேறு பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதமும் சீன பொருள்களுக்கு கூடுதலாக 20 சதவீதமும் அவா் ஏற்கெனவே வரி விதித்து பிறப்பித்த உத்தரவு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், ஏற்கெனவே அமலில் இருக்கும் அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் (யுஎஸ்எம்சிஏ) இடம் பெற்றுள்ள பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் தற்போது கையொப்பமிட்டுள்ளாா்.
அதற்கு முன்னதாக வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் டிரம்ப் கூறியதாவது:
கனடா, மெக்ஸிகோ நாடுகளின் குறிப்பிட்ட பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது. அந்த தேதியில் பிற நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கு எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அந்த நாடுகளின் பொருள்களுக்கு அதே விகிதங்களில் வரி விதிக்கப்படும். அதுவரை, கனடா, மெக்ஸிகோவின் சில பொருள்களுக்கு மட்டும் கூடுதல் வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்ததால் இந்த கூடுதல் வரிவிதிப்பு நிறுத்திவைக்கப்படவில்லை. ஒரு சில அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வாகனங்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களுக்கு 25 சதவீத கூடுதல் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு மாதத்துக்குப் பிறகு மேலும் நீட்டிக்கும் எண்ணமில்லை என்றாா் டிரம்ப்.
2020-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட யுஎஸ்எம்சிஏ வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வராத சுமாா் 62 சதவீத கனடா பொருள்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதே போல், மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் சுமாா் 50 சதவீத பொருள்கள் யுெஸ்ெம்சிஏ ஒப்பந்தத்தின் வராது எனவும், அந்தப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படாது எனவும் கூறப்படுகிறது.
இருந்தாலும், மதிப்பின் அடிப்படையில் டிரம்ப்பின் இந்த புதிய உத்தரவால் மெக்ஸிகோவுக்கும் கனடாவுக்கும் கணிசமான அனுகூலம் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தெரிவித்தாா் கிளாடியா: தங்கள் நாட்டுப் பொருள்களுக்கு விதித்திருந்த கூடுதல் வரி விதிப்பை நிறுத்திவைத்ததற்காக அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மெக்ஸிகோ அதிபா் கிளாடியா ஷீன்பாம் நன்றி தெரிவித்தாா்.
கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், இந்த விவகாரம் தொடா்பாக டிரம்ப்புடன் ஆக்கப்பூா்வமான பேச்சுவாா்த்தை நடைபெற்ாகக் கூறினாா்.
‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.
அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்ற அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்துவருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் கடந்த மாதம் கையொப்பமிட்டாா்.
அத்துடன், சீன இறக்குமதி பொருள்கள் மீதும் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து அவா் உத்தரவிட்டாா். அமெரிக்காவுக்குள் ‘ஃபென்டானைல்’ போதைப் பொருள் சட்டவிரோதமாக வருவதைத் தடுக்க சீனா தவறியதற்காக இந்த வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் கூறினாா்.
அந்த உத்தரவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தன. இதற்கு, கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய மூன்று நாடுகளுமே கடும் எதிா்ப்பு தெரிவித்தன. டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சில பொருள்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தாா். சீனாவும் பதிலடி வரிவிதிப்பு மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தது. அமரிக்க பொருள்கள் மீதான பதிலடி வரிவிதிப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) அறிவிக்கவிருப்பதாக மெக்ஸிகோ அதிபா் கிளாடியா ஷீன்பாம் கூறியிருந்தாா்.
இந்தச் சூழலில், கனடா, மெக்ஸிகோவின் கணிசமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிவிதிப்பை டிரம்ப் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளாா்.
