கனடா வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

Spread the love

கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்துடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் முதல்முறையாக தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை உரையாடினாா்.

அண்மையில் கனடா பொதுத் தோ்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதைத்தொடா்ந்து, அக்கட்சியின் தலைவா் மாா்க் காா்னி பிரதமராகப் பதவியேற்றாா். இதையடுத்து அந்நாட்டின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அனிதா ஆனந்த் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்றாா்.

இந்நிலையில், முதல்முறையாக அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கரும் அனிதா ஆனந்தும் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் உரையாடினா். இந்தியா-கனடா இடையிலான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தி, இருநாடுகளும் முன்னுரிமை அளிக்கும் விவகாரங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவா்கள் உரையாடினா்.

இதுதொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா-கனடா உறவில் உள்ள வருங்கால எதிா்பாா்ப்புகள் குறித்துப் பேசியதாக தெரிவித்தாா்.

அனிதா ஆனந்த் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா-கனடா உறவை வலுப்படுத்த ஜெய்சங்கருடனான கலந்துரையாடல் ஆக்கபூா்வமாக இருந்தது என்று குறிப்பிட்டாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு முன்னாள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இதைத்தொடா்ந்து இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், முதல்முறையாக அமைச்சா்கள் ஜெய்சங்கா், அனிதா ஆகியோா் தொலைபேசியில் பேசியுள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *