மதுரை: மதுரையில் கொட்டி தீர்த்த கனமழையால் மாசி வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கர்டர் பாலம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இந்நிலையில், கர்டர் பாலத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியை மேயர் இந்திராணி, ஆணையர் தினேஷ்குமார் பார்வையிட்டனர்.
வளிமண்டல கீழடுத்து சுழற்சியால் நேற்று (அக்.12) தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த இடி மின்னலுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கியது. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் மாசி வீதிகள் முழுவதிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மழை நீரில் சாய்ந்துவிழுந்து இழுத்துச் செல்லப்பட்டன.
மதுரை ரயில் நிலையம் , ஆரப்பாளையம், கேகே. நகர், அண்ணாநகர், சிம்மக்கல், மாட்டுத்தாவணி திருப்பரங்குன்றம், ஆனையூர், கோரிப்பாளையம் பழங்காநத்தம், பைபாஸ் சாலை, அவனியாபுரம், வில்லாபுரம் , விமான நிலையம் , திருநகர் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் அதிக அளவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போன்று தண்ணீர் புரண்டு ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் போக முடியவில்லை. சில போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
இதில் மதுரை மணி நகரம் ஒர்க்ஷாப் ரோடு பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீரானது 5 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாலத்தை கடக்க முயன்ற காவல்துறை வாகனம் சிக்கியது. வாகனத்தில் இருந்த காவல்துறையினர் நீந்தி தப்பினர். தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு காரும் சிக்கியது. காரில் இருந்த மூவரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். மேலும், அந்த பாலத்தின் வழியே கடக்க முயன்ற டூவீலர்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் போன்ற வாகனங்களும் வெள்ள நீரில் சிக்கின.
மதுரை மாநகரின் மையப் பகுதியில் இரவு நேரத்தில் நேரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெள்ள நீருக்குள் கார் சிக்கி நீரில் மூழ்கியது சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மதுரையில் கொட்டித் தீர்த்த 15.6 சென்டி மீட்டர் கனமழையால் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. வாகன காப்பகதில் நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கார், லாரி உட்பட வாகனங்கள் தண்ணீரில் சிக்கி சோதமடைந்தன.
மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில் முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிக்கு தோண்டிய பள்ளத்தால் குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணானது.
குடியிருப்புக்களுக்குள் புகுந்த தண்ணீர்; கன மழை காரணமாக மதுரை கரும்பாலை பகுதியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மதுரை அரசு மருத்துவனை வளாகத்திற்குள் மழை நீர் தேங்கியதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
மழையின் காரணமாக மாட்டுத்தாவணி அண்ணாநகர், கேகே நகர், வண்டியூர், காமராஜர் சாலை, விளக்குத்தூண், தெற்கு வாசல், பழங்காநத்தம், காளவாசல், ஆரப்பாளையம், கோரிப்பாளையம், புதூர், அய்யர் பங்களா உள்ளிட்ட பகுதிகளில் மின்சார பாதிப்பும் ஏற்பட்டது. பழங்காநத்தம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இன்று காலை மின்சார பாதித்த பகுதியில் சீரமைக்கப்பட்டு மின் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையில், மதுரை நகரில் ஆர்பாளையம் பகுதியிலுள்ள கர்டர் பாலம், தத்தனேரி சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை மின் மோட்டார் மூலம் மாநகராட்சி பணியாளர்கள் வெளியேற்றினர். இப்பணியை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினர். இது போன்று நகரில் மழையால் பாதித்த பகுதிகளையும் மேயர், ஆணையர் நேரில் ஆய்வு செய்தனர்.
மதுரை நகர், நகரை ஒட்டிய பகுதியில் தாழ்வான இடங்களிலுள்ள குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் சிரம்மப்பட்டனர். மதுரை நகர், மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறையினர் ஆய்வு செய்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மக்கள் கோரிக்கை; இவ்வாண்டு வழக்கத்தைவிட மழை பொழிவு அதிகரிக்கும் என்பதால் மதுரையில் நேற்று இரவு பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மதுரை மாவட்டம், மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.