சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுதல், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1747.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.3500 கோடிக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வரை முதற்கட்டமாக அரசால் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.252 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பயனாளிகள் பயனடையும் வகையில், குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டைகள் டான்செம் நிறுவனத்திடமிருந்தும், இரும்பு கம்பிகள் டெண்டர் மூலம் கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு அரசால், ஏற்கனவே, ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும், ரூ.500 கோடி வழங்கப்பட்டு வீடுகளின் கட்டுமானத்திற்கேற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.
அதே போல், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், இந்நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகளை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு, அரசால் ஏற்கனவே, ரூ.150 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் மேலும் ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதே போல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம் – II ன் கீழ், கிராம ஊராட்சியில் தேவைப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், 53,779 பணிகள் கடந்த மூன்றாண்டுகளில் எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் 2,482 கிராம ஊராட்சிகளில் 15,695 பணிகள் எடுக்கப்பட்டு, 12,722 பணிகள், முடிக்கப்பட்டுள்ளன. இதுவரை, அரசால் ரூ.347.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளில் முழுவீச்சில் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.