திண்டுக்கல் / திருநெல்வேலி: திண்டுக்கல் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று காலை சோதனை மேற்கொண்டனர்.
மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் செல்வசேகரன், திண்டுக்கல் சென்னமயநாயக்கன்பட்டியில் வசிக்கிறார். இவரது குடும்பத்தினர் திருநெல்வேலியில் உள்ளனர். இவர் 2015 முதல் 2022 வரை திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் புவியியல், சுரங்கத் துறையில் பணிபுரிந்தார்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.80 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக செல்வசேகரன் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சென்னமநாயக்கன்பட்டி ஏழுமலையான் நகரில் உள்ள செல்வசேகரன் வீட்டில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பிநாகராஜன் தலைமையில், ஆய்வாளர் கீதாரூபாராணி மற்றும் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.இதேபோல, திருநெல்வேலி என்ஜிஓ குடியிருப்பில் உள்ள செல்வசேகரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.