சமீபத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்வு ஒன்றுக்காக, கடைகோடி மாவட்டத்துக்கு விசிட் அடித்தார் சிறுத்தை கட்சித் தலைவர். அவர் வரும் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அந்தப் பகுதியிலுள்ள மூன்று மாவட்டச் செயலாளர்களில் ஒருவர், தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகள், தங்குமிடம், உணவு உபசரிப்பு என்று அட்வான்ஸாக சில லட்டுகளைச் செலவழித்திருக்கிறார்.
ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், சக மாவட்டப் புள்ளிகளும், சிறுத்தை தலைவரின் அருகிலேயே அந்த மாவட்டச் செயலாளரை நெருங்கவிடவில்லையாம். தலைவரும்கூட அது குறித்து கவலைப்படவில்லையாம். “பட்டியல் சமூகத்தினர் அல்லாதோருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கிவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள்.
ஆனால், பட்டியல் சமூகத்தினர் அல்லாத நிர்வாகிகளால், தலைவரைச் சந்திக்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு சக மாவட்டப் புள்ளிகள் அராஜகம் செய்கிறார்கள். கடைக்கோடி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த விவகாரத்தில், அப்செட்டாகியிருக்கும் அந்த மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்து விலகும் மனநிலைக்கு வந்துவிட்டார்” என்கின்றன சிறுத்தை கட்சி வட்டாரங்கள்!