கன்னடர்களுக்கு 100% வேலை: மசோதா தற்காலிக நிறுத்தம்!

Dinamani2f2024 072f858fc49e 145d 48da A158 E7c883876ffc2fsiddaramaiah03.jpg
Spread the love

கர்நாடகத்தில் தனியார் நிறுவன பணியிடங்களில் 100 சதவிகிதம் கன்னட மக்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கர்நாடக முதல்வர் அலுவலகத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து வரும் நாள்களில் இந்த மசோதா குறித்து பல்வேறு தரப்புகளில் கருத்துகள் கேட்கப்பட்டு, மதிப்பாய்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த திங்கள்கிழமை (ஜூலை 15) நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கன்னட மக்களுக்கு தனியார் நிறுவன பணியிடங்களில் கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று (ஜூலை 17) பதிவிட்டிருந்தார்.

இந்த மசோதாவின்படி, தனியார் நிறுவனங்களின் உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை 100 சதவிகிதம் கன்னட மக்களுக்கு கட்டாயம் வழங்க வழிவகை செய்கிறது.

மேலும், தனியார் நிறுவனங்களில் உள்ள மேலாளர் போன்ற நிர்வாக பணிகளில் 50 சதவிகிதமும், நிர்வாகம் அல்லாத பிற பணிகளில் 75 சதவிகிதமும் கன்னட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது 15 ஆண்டுகளுக்கு மேல் கர்நாடகத்தில் வசித்து கன்னட மொழி நன்றாக எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்க வேண்டும்.

இடஒதுக்கீட்டை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மசோதா, சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்து சட்டமாக இயற்றப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த சட்டத்தை அமல்படுத்துவது கடினம் என்றும், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனையடுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மசோதா குறித்த பதிவை அவர் நீக்கினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *