சென்னை: கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு வீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணியின் துணைத் தலைவரான சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை, அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று முன்தினம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடந்து அவரிடம் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். கார்த்திகாவின் பயிற்சியாளர் ராஜி, கபடி வீராங்கனை காவ்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் சமூக வலைதளத்தில் இது தொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்ட பதிவில், “தமிழக அரசு கார்த்திகாவுக்கு நல்ல சூழலில் உள்ள வீடு ஒன்றை வழங்க வேண்டும். தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். அந்த வகையில் கண்ணகி நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடலை உருவாக்கித் தர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “இயல்பான சூழலில் விளையாட்டிலும், கல்வியிலும் சாதனை படைப்பதை விட நெருக்கடியான சூழல், அழுத்தங்களுக்கு இடையில் வாழ்ந்து கொண்டு சாதனை படைப்பது மிகவும் கடினமானது.
அந்த வகையில் கார்த்திகா படைத்திருக்கும் சாதனை கூடுதல் சிறப்புமிக்கது. கார்த்திகாவுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள ஊக்கத்தொகை போதுமானதல்ல. அவருக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்குவதுடன், அரசு வீடு வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
திருமாவுடன் சந்திப்பு அசோக் நகரில் உள்ள விசிகஅலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை கார்த்திகா நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறும்போது, “நான் பிறந்த கண்ணகி நகருக்கு புதிய பெருமையைச் சேர்த்துள்ளார் கார்த்திகா.
கண்ணகி நகரின் மீதான தவறான பார்வையை உடைத்திருக்கிறார். தமிழக அரசு அவருக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியிருப்பதை வரவேற்கிறேன். எனினும் அதை ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு வீடு ஒதுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.