கமலா ஹாரிஸுக்கு ஆதரவு: டெய்லர் ஸ்விஃப்ட்டை எச்சரித்த டிரம்ப்!

Dinamani2f2024 09 112ffy4a0akg2fdonald20trump20tailor20edi.jpg
Spread the love

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிசை ஆதரிப்பதற்கான உரிய விலையை டெய்லர் ஸ்விஃப்ட் தருவார் என அமெரிக்க முனனாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அவர் எப்போதும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களை ஆதரித்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இதேபோன்று ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் இரு கட்சிகளுக்கு இடையிலான பிரசாரம் அடுத்தடுத்த கட்டத்தை எட்டி வருகின்றன.

கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக டெய்லர் ஸ்விஃப்ட்

அமெரிக்கத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, டிரம்ப் – ஹாரிஸுக்கு இடையிலான நேரடி விவாதம் இந்திய நேரப்படி இன்று (செப். 11) அதிகாலை நடைபெற்றது. இது ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளில் நேரலையும் செய்யப்பட்டது.

இதில் அமெரிக்காவில் நிலவும் பிரச்னைகளான கருக்கலைப்பு, எல்லை விவகாரம், பனவீக்கம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்தின் முடிவில், பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் தனது ஆதரவை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு வழங்குவதாக வெளிப்படையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

அமெரிக்கா அமைதியான முறையில் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, கமலா ஹாரிஸ் திறமையான தலைவர் என்றும், உரிமைகளுக்காக போராடுவதாகவும் ஸ்விஃப்ட் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்விஃப்ட்டை எச்சரிக்கும் டிரம்ப்

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளையும் பதிவு செய்தனர். குறிப்பாக தொழிலதிபரும் டிரம்ப் ஆதரவாளருமான எலான் மஸ்க் தரக்குறைவாக விமர்சித்திருந்தார்.

இதனிடையே, அமெரிக்க செய்தித் தொலைக்காட்சியில் விவாதம் குறித்து டொனால்ட் டிரம்ப்பிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது டெய்லர் ஸ்விஃப்ட் கருத்து குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகன் அல்ல. இது எனக்கான கேள்வி நேரமாக எடுத்துக்கொண்டு அவரைப் பற்றி பேசுகிறேன். நீங்கள் ஜோ பைடனை ஆதரிக்க முடியாது. நீங்கள் பைடனை பாருங்கள், உங்களால் ஆதரிக்க முடியுமா?

ஆனால், ஸ்விஃப்ட் தாரளமயவாதி. அவர் எப்போதும் ஜனநாயகவாதிகளை ஆதரிப்பதாகவேத் தெரிகிறது. அவர் துறை சார்ந்த சந்தையில் அதற்கான தகுந்த விலையை அவர் தருவார்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், டெய்லர் ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடுகையில், கால்பந்தாட்ட வீராங்கனையான பிரிட்டானி லின் மஹோம்ஸை தனக்கு பிடிக்கும் என டிரம்ப் குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் சமூக வலைதளப் பதிவுகளுக்கு பிரிட்டானி விருப்பக்குறியிட்டு (லைக்) வருவதாக அமெரிக்க ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *