அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் சூழலில், பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. நவம்பர் 5 ஆம் தேதி நடக்கவிருக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும் சமபலத்துடன் இருந்துவருவதால் கடும்போட்டி நிலவுவதோடு கருத்துக்கணிப்புகளிலும் இருவருக்கும் 50 – 50 வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றன.
கமலா ஹாரிஸிற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆதரவு அதிகளவில் இருந்து வருகிறது. மறுபக்கம் டொனால்டு டிரம்பிற்கு முன்னணி உலக பணக்காரரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், ’கமலா ஹாரிஸ் மனநலம் குன்றியவர்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிரம்ப், “அதிபர் ஜோ பைடனைப் போல் கமலா ஹாரிசும் மனநலம் குன்றியவர். இதுவரை சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எதுவும் செய்யாதது ஏன்? எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் நம் நாட்டிற்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களால்தான் இதை நம் நாட்டிற்கு செய்ய முடியும். சட்டவிரோத குடியேற்ற பிரச்னைக்கு கமலா ஹாரிசால் எதையும் செய்ய முடியாது. அவர் நமது நாட்டிற்கு வந்துள்ள பேரழிவு” என கடுமையாக கமலா ஹாரிஸை சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்காவில் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து வசிப்போர், அமெரிக்கர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள். கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள்” என்று டிரம்ப் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
