’கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்’ என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீது தனிமனித ரீதியிலான தாக்குதலை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே போட்டி கடுமையாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் சனிக்கிழமை(செப். 28) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரும் அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸை ’மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்றும் ’மனநலம் குன்றியவர்’ என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் குடியேறுபவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார் டிரம்ப். சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் குடியேறுபவர்களால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் டிரம்ப்.
இந்நிலையில், அமெரிக்காவுக்காவில் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து வசிப்போர், அமெரிக்கர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதாகவும், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.
ஆசிய அமெரிக்கர்களிடையே கமலா ஹாரிஸுக்கு அதிகரிக்கும் ஆதரவு
அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக,சுமார் 70 லட்சம் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் தற்போதைய அதிபர் ஜோ பைடன் – துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், மெக்சிகோ – அமெரிக்க எல்லைப் பகுதிகளுக்கு முதல்முறையாக பிரசாரத்துக்காகச் சென்ற கமலா ஹாரிஸ், எல்லை தாண்டிய ஊடுருவல் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படுமென தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு எல்லையான மெக்சிகோ வழியாக கடத்தப்படும் ஃபெண்டனில் போதைப்பொருள் புழக்கம் அங்குள்ள இளம் பருவத்தினரிடையே அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தெற்கு எல்லைப் பகுதிகள் வழியாக அமெரிக்காவுக்குள் ‘ஃபெண்டனில்’ என்ற வலி நிவாரணப் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார்.