சென்னை: அகரம் விதையின் 15-ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, கமல்ஹாசன், கார்த்தி, சிவகுமார், ஜோதிகா, இயக்குநர்கள் ஞானவேல், வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு, டிரம்ஸ் சிவமணி ஆகியோர் பங்கேற்றனர். அகரம் மூலம் கல்வி பெற்ற பயனாளிகளும் தங்கள் அனுபவங்களை இந்த விழாவில் பகிர்ந்து கொண்டனர்.
விழாவை தொடங்கி வைத்த நடிகர் சூர்யா, “இது அகரம் விதையின் 15-வது ஆண்டு. கல்வியே ஆயுதம் என்பதுதான் அகரத்தின் நம்பிக்கை. இன்று அந்த நம்பிக்கை நிஜம் ஆகியுள்ளது. கல்வியில் வெறும் படிப்பு மட்டுமல்லாது மாணவ, மாணவிகளுக்கு பண்பு சொல்லிக் கொடுப்பது, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் பணியை அகரம் செய்து வருகிறது. இது மிகவும் சந்தோஷமான ஒன்று. அதை பகிரும் நாள்தான் இன்று. கிட்டத்தட்ட 6,700 முதல் தலைமுறை பேர் பட்டதாரிகளாக உருவாகி உள்ளனர்.
அவர்கள் பெற்ற கல்வி மூலம் அந்த குடும்பங்கள் வளர்ச்சி கண்டுள்ளன. அப்படி அகரம் மூலம் பலன் அடைந்த அந்த மாணவர்கள்தான் இன்று பலமடங்கு திரும்ப கொடுத்துள்ளார்கள். இப்போது அகரத்தை நடத்திக் கொண்டிருப்பது அவர்கள்தான். தங்களைப் போலவே இந்த சமுதாயத்தில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு அவர்கள் உதவி வருகிறார்கள். கல்வி என்ன மாதிரியான மாற்றத்தை கொடுக்கிறது என்பதை கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சி இது” என்றார்.
தொடர்ந்து அகரம் மூலம் பலன் அடைந்தவர்கள் தங்கள் ‘அகரம்’ அனுபவங்களை பகிர்ந்தனர். அவர்களின் சக்சஸ் கதையை கேட்டு சூர்யா உட்பட பலரும் நெகிழ்ந்தனர்.
“தன்னார்வலர்களின் முயற்சிதான் அகரம் இயக்கத்துக்கு முக்கிய காரணம். இவர்கள் எல்லோரும் ‘அடுத்தவங்க நல்லா இருக்கணும், படிக்கணும்’னு நினைக்குற மனம் கொண்டவங்க. அது நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். பயனாளிகளின் நிலையை அறிய அகரம் சார்பில் பயணிக்கும் நபர்களின் பயணம் அற்புதமானது. இந்த முயற்சிக்கு நிறைய பேர் கை சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். அதன் மூலம் இது இன்னும் பலமடையும். இன்னும் நாம் படிக்க வைக்க வேண்டிய பிள்ளைகள் உள்ளனர்” என கார்த்தி பேசினார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “நான் அரசுப்பள்ளியில் படித்த மாணவன். எங்கள் அம்மாவுக்கு பள்ளி நடத்திய அனுபவம் உண்டு. நான் இந்த நிகழ்வில் பார்வையாளனாக வந்தேன். எனக்கு நெகிழ்ச்சி தரும் அனுபவம் இதில் கிடைத்தது. நானே இப்படி உணரும் போது அகரம் சார்பில் பணியாற்றும் குழுவினர் மற்றும் அதை நடத்தி வரும் சூர்யா உள்ளிட்டோரின் உணர்வு எப்படியானதாக இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.
அகரம் மூலம் பலன் அடைந்தவர்கள் இன்றைய தங்கள் வாழ்க்கையின் நிலையை பகிர்ந்தனர். அகரம் இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும் என நான் யோசித்தேன்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் சூர்யா நினைத்திருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். வணிக நிறுவனம் மாதிரியான முயற்சியை கூட முயன்று இருக்கலாம். ஆனால், அதை தாண்டி ‘விதை’ என்ற திட்டம் மூலம் இளைஞர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டுமென என எண்ணியதும், அதை யாருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என எண்ணியதும் தான் அகரம் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன். இது ஒரு ரிலே ரேஸ் மாதிரி. அகரம் மூலம் பயன் அடைந்தவர்கள் அகரத்துக்கு உதவ வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் பேசுகையில், “கல்வியும் அன்பும் ஒருங்கே கிடைப்பது இல்லை. அது அம்மாகிட்ட கிடைக்கும். அகரத்திலும் கிடைக்கும். சமூக வாழ்வில் இந்த மாதிரியான நற்பணியை செய்பவர்களுக்கு முள்கிரீடம் தான் கிடைக்கும். ‘கல்வியை நான் கற்றே தீர்வேன். நான் கற்றதை மற்றவர்கள் பெற்றுக்கொள்ள ஆவண செய்வேன்’ என சொல்வதெல்லாம் ஒரு நீட்சி.
இந்த மேடையில் நாம் பார்த்த மருத்துவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் விழாவில் நாம் பார்க்க முடியாது. 2017-க்கு பிறகு இந்த மாணவர்களின் மருத்துவ கனவை இவர்களால் தொடர முடியவில்லை. அதற்கு காரணம் நீட் தேர்வு. அதனால் தான் நீட் வேண்டாம் என்று நங்கள் சொல்கிறோம். அதற்கு காரணம் சட்டம். அகரம் நினைத்தாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது. அந்த சட்டத்தை மாற்றி எழுத கூடிய பலத்தை தருவது கல்விதான். அந்த கல்வி இந்தப் போரில் ஆயுதம் மட்டுமின்றி நாட்டையே செதுக்க கூடியது. சனாதன சங்கிலிகளை மற்றும் சர்வாதிகார சங்கிலிகளை அடித்து நொறுக்கும் ஒரே ஆயுதம் கல்விதான்.
ஏனெனில், பெரும்பான்மை மூடர்கள் அதை வீழ்த்தி விடுவார்கள். சினிமா நிகழ்ச்சிகளில் கிடைக்காத சந்தோஷம் எனக்கு இதில் பங்கேற்கும் போது கிடைக்கிறது. ஏனெனில் சினிமா பார்வையாளர்களை மகிழ்விக்கிறது. அதேநேரத்தில் அது வியாபாரம். ஆனால், இது அன்பு மற்றும் கல்வி சார்ந்தது. அதை கொண்டு நாம் உலகை வெல்லலாம்” என்றார்.
தொடர்ந்து சூர்யா பேசுகையில், “பல பேர் நிறைய உதவிகளை தனிநபர்களாக, நிறுவனமாக செய்து வருகிறார்கள். நான் நடிக்க வந்த பிறகு எனக்கு கிடைத்த அன்புக்கு கைமாறாக 2006-ல் நான் செலுத்த விரும்பிய நன்றியுணர்வு தான் அகரம். விதை முயற்சி 15 ஆண்டுகளை எட்டியுள்ளது. கல்வியை கொடுத்தால் அனைத்தையும் பெறலாம் என்ற முயற்சியில் இதை தொடங்கினோம். கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என எண்ணி இதை தொடங்கினோம்.
சிங்கம் படத்தின் படப்பிடிப்பின்போது நல் உள்ளங்கள் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் திரட்டி ஏழை மாணவர்களின் கல்வி கனவை நிறைவேற்ற விரும்பினோம். இதில் கல்வி நிறுவனங்களும் இணைந்தன. அகரம் பயனாளிகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து தேர்வு செய்து வருகிறோம். மாணவர்களின் பொருளாதார தடையை நீக்கினாலும் அவர்களின் மன தடையை நீக்கும் பொறுப்பும் எங்களுக்கு இருந்தது. அதை அவர்கள் கடந்து வர தன்னார்வலர்கள் உதவினார்கள்.
இது மிகவும் அழகான பயணம். இதில் என்னை சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி சொல்லவே நான் இங்கு நின்று கொண்டுள்ளேன். இதை தொடங்குவது மட்டுமே எண்ணம். மற்றபடி எல்லோரது முயற்சியும், விடாமுயற்சியும் தான் அகரம் விதையை 15 ஆண்டுகள் பயணிக்க செய்துள்ளது. இதன் மூலம் நிறைய உறவுகள் கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.