தேனி: கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (செப்.4) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 77.
1947 ஜனவரி 21-ம் தேதி பிறந்த ஓ.ஆர்.ராமச்சந்திரன் கம்பத்தைச் சேர்ந்தவர். உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுரத்தர் ஹவுதியா கல்லூரியில் பிஏ பட்டப் படிப்பையும், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் எம்ஏ படிப்பையும், சென்னை சட்டக்கல்லூரியில் பிஎல் படிப்பையும் முடித்துள்ளார். இவரது பெற்றார் ஓ.ராமசாமித்தேவர் – சொர்ணத்தாய். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், விவசாய சங்கத் தலைவராகவும், கம்பம் நகராட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 1991 பொதுத் தேர்தலில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1996, 2001 என அடுத்தடுத்த தேர்தல்களிலும் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வகித்த பதவிகள்: மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்தபோது தேனி மாவட்ட தலைவர், பின்னர் மாநில துணைத் தலைவர், கள்ளர் கல்விக் கழகத்தில் 15 ஆண்டுகள் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். தற்போது தமாகா-வில் மாநில தேர்தல் பணிக்குழு உறுப்பினராகவும், கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும், தேர்தல் பிரிவு மாநிலத் தலைவராகவும் இருந்தார். கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று பிற்பகலில் காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.