'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' – மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?

Spread the love

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டத்தில், ‘நமக்கு 5 சீட்டு 6 சீட்டுனு வெளியே பேசிக்கிறாங்க. அதெல்லாம் வதந்தி. நமக்கு கௌரவமான எண்ணிக்கையில சீட் கிடைக்கும்’ என பிரேமலதா பேசியிருப்பதால் மா.செக்கள் குஷியாகியிருக்கின்றனராம்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த கூட்டத்தில் என்னவெல்லாம் பேசப்பட்டதென மா.செக்கள் சிலரிடம் பேச்சு கொடுத்தோம். ‘நீண்ட நாள் கழித்து அண்ணியார் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். அதிமுக கூட்டணியில் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசினார். ராஜ்யசபா உத்தரவாதம் கொடுத்துவிட்டு இல்லை என்றது தொடங்கி, எங்களின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அந்தக் கூட்டணியில் சரியாக மரியாதை இல்லாதது வரைக்கும் எல்லாவற்றையும் குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும், மா.செக்கள் விரும்பியபடியே திமுக கூட்டணிக்காக முயன்று வெற்றிகரமாக முடித்திருப்பதாகவும் மகிழ்ச்சியாக கூறினார். குறிப்பாக, வெளியில் பேசப்படுவதைப் போல தேமுதிகவுக்கு 5-6 சீட்கள் என்பதை வதந்தி என உறுதி செய்தார். ‘நமக்கு கௌரவமான ஒரு எண்ணிக்கையில் சீட்டை பேசி முடித்திருக்கிறோம்’ என்றார். மேலும், உள்ளாட்சியிலும் 10-15% இடங்களுக்கு உத்தரவாதம் கேட்டுதான் கூட்டணியை முடித்திருக்கிறோம். அதனால் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சியில் கட்டாயம் வாய்ப்பு கிடைக்குமென நம்பிக்கை ஊட்டினார்.

பிரேமலதா
முதல்வர் மு.க.ஸ்டாலின் – பிரேமலதா

விசிகவும் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாள் நாம் திமுகவுடன் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிடுவோம் என்றும் அழுத்தமாக கூறினார்’ என்றனர்.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் இருவரும் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கின்றனர். மாவட்டச் செயலாளர்கள் சார்பில் திமுகவுடன் கூட்டணி பேசி ராஜ்ய சபா சீட்டையும் வாங்கி வந்ததற்காக கூட்டாக நன்றி கூறப்பட்டிருக்கிறது.

‘5-6 சீட்டுனு வர்ற செய்தியெல்லாம் வதந்தினு சொல்றது மூலமா விசிக, கம்யூனிஸ்ட்டை விட அதிக தொகுதிலதான் நிக்கபோறோங்றதை அண்ணியார் குறிப்பால உணர்த்துறாங்க’ என குஷியாகின்றன தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *