தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்ற பெயரில் தலித்துகளற்ற மற்ற கட்சியினரை ஒருங்கிணைத்தார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலையை தைலாபுரத்தில் வைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைக்காக கட்சி தொடங்கிய ராமதாஸை சமூகத்தை பிளக்கும் வெறுப்பரசியலை நோக்கி தள்ளியது வாக்கரசியல். இந்த சமயத்தில்தான் பாஜகவும் பாமகவும் இருக்கும் கூட்டணியில் விசிக எப்போதும் இருக்காது என திருமா அறிவித்தார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமானது பாமக. அது அதிமுகவின் தேர்தல். மோடியா லேடியா எனக் கேட்டு ஜெ. வாக்குகளை அள்ளினார். பாமக சார்பில் அன்புமணி மட்டும் தர்மபுரி தொகுதியில் வென்றார்.
கட்சி ஆரம்பித்தபோது தன்னுடைய கொள்கைகள், லட்சியங்கள் என ராமதாஸ் வகுத்து வைத்திருந்த கோட்பாடுகளை ஒவ்வொன்றாக அவரே மீறிய காலக்கட்டம் இது.
‘என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். இது சத்தியம். இதிலிருந்து தவறினால் என்னை நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்’ என பழைய ராமதாஸ் கூறியிருந்தார். அன்புமணி வழி அந்த சத்தியத்தை எப்போதோ மீறிவிட்டார்.