அடுத்ததாக இன்னொரு புதிய உத்தியையும் கருணாநிதி புகுத்தினார். அதுதான் `டோர் ஸ்லிப்’ எனப்படும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் முறை. இன்று எல்லோரும் பயன்படுத்தும் இந்த முறையை முதலில் கொண்டு வந்தவர் கருணாநிதிதான் என்கிறார்கள் அந்தக் கால அரசியலை அசைபோடுபவர்கள். அதாவது, ஒரு வீட்டில் வாக்கு சேகரிக்கும்போது, அந்த வீட்டின் கதவில், “எங்கள் ஓட்டு கருணாநிதிக்கே’ என்கிற வாசகமும் உதயசூரியன் படமும் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை, திமுகவினர் ஒட்டி விடுவார்கள். அதே போல் வீடுதோறும் காலண்டர்களும் விநியோகமானது.
மூன்றாவது உத்திதான் எதிரணியினரையே, குறிப்பாக காங்கிரஸ் கட்சியைக் கதிகலங்க வைத்த உத்தி. அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து, காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் வீடுகளுக்கே சென்று “எனக்கு ஓட்டுப் போடுங்கள்” எனக் கேட்பார் கருணாநிதி. அவரது கார் ஓட்டுநர், கருணாநிதி வாக்கு கேட்டுச் செல்லும் வீடுகளின் கதவில், உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை ஒட்டி வைத்துவிட்டு வருவார்.
காலையில் எழுந்து பார்க்கும் காங்கிரஸ்காரர்கள் அதிர்ச்சி அடைவார்கள். “என்னய்யா, கருணாநிதி வந்தாரா?” என ஒருவருக்கு ஒருவர் கேட்கத் தொடங்கினார்கள். கூடவே பிரச்சாரத்தில் அண்ணா, எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரும் கை கொடுத்தனர்.

பிரசாரத்தில் கருணாநிதி பயன்படுத்திய வாகனம் ஒரு பழைய ஃபியட் கார். அந்தக் காரில், தன்னுடன் ஆறு பேரை அடைத்துக்கொண்டு, தொகுதி முழுவதும் சுற்றிச் சுற்றி சுழன்றடித்தார். இப்போது இருப்பது போன்றெல்லாம் அப்போது உணவு விடுதிகள் அவ்வளவாக கிடையாது. கரூர் மார்க்கெட்டில் எஸ்.வி. சாமியப்பன் என்பவரின் லாரி செட்டில் இருந்த திமுக அலுவலகமே, இரவில் கருணாநிதி உள்ளிட்டோருக்கான தங்குமிடமாக இருந்தது.
இரண்டு ரூபாயில் எட்டு இட்லி பொட்டலம் வாங்கி, எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவார்கள். தொலைபேசி அரிது. கரூர் அஞ்சல் நிலையத்துக்கு எதிரே இருந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வரிசையில் நின்றுதான் டிரங்க் கால் மூலம் சென்னைக்குப் பேசி அண்ணாவிடம், தேர்தல் களத்தின் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று தனது அக்காள் மகன் முரசொலி மாறனுக்கு டிரங்கால் போட்டு பேசித்தான் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் கைச்செலவுக்கான பணத்தையும் வரவழைப்பாராம் கருணாநிதி.