கருணாநிதி, ஜெயலலிதா ராஜினாமா; அதிமுகவின் அசுர பாய்ச்சல், அனுதாப அலையால் வீழ்ந்த திமுக | 1991 ஆடுபுலி | the political drama that happens during 1991 tn assembly election

Spread the love

வேட்பாளர்கள் மரணம் காரணமாக சென்னை எழும்பூர், முசிறி தொகுதிகளைத் தவிர 232 தொகுதிகளுக்கு முடிவுகள் வெளியானது. 158 தொகுதிகளில் அதிமுகவும், அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட ஐந்து பேருமாக 163 இடங்கள் அதிமுகவிற்கு கிடைத்தன. 61 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தன. ஆர்.எம்.வீரப்பன் இத்தேர்தலில் போட்டியிடவில்லை அல்லது சீட் வழங்கப்படவில்லை என்றும் கூறலாம். தேனி தொகுதியில் நெடுஞ்செழியன், தஞ்சாவூர் தொகுதியில் எஸ்.டி.சோமசுந்தரம் வென்றனர்.

1991 தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார். சேப்பாக்கத்தில் அன்பழகன், திருவல்லிகேணியில் நாஞ்சில் மனோகரன் உள்ளிட்ட தலைவர்கள் தோல்வியைத் தழுவினர். திமுக கூட்டணியில் போட்டியிட்ட அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகத்தின் திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரும் வெற்றி பெற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜி.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வி.தம்புசாமி, ஜனதா தளம் கட்சியின் டாக்டர் குமாரதாஸ் ஆகியோர் திமுக கூட்டணியில் வென்றவர்கள். முதல் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனது வெற்றியை பதிவு செய்தது, பண்ருட்டி ராமச்சந்திரன் வென்றார். சுயேட்சை வேட்பாளர் தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் முதலமைச்சராக 1991 ஜூன் 24 அன்று ஜெ.ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டார். மலிவுவிலை மதுக்கடைகளை மூடுவதாக முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. மத்தியிலும் 224 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. பி.வி.நரசிம்மராவ் பிரதமர் ஆனார். முக்கியத் திருப்பமாக 119 இடங்களில் வென்ற பாரதிய ஜனதாக் கட்சி பிரதான எதிர்கட்சியாக நாடாளுமன்ற மக்களவையில் அமர்ந்தது.

அனுதாப அலையில் அதிமுக வென்றதாக திமுக விமர்சனம் செய்தது. காங்கேயம், பர்கூர் இரண்டு தொகுதிகளில் வென்றதால், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஜெயலலிதா. திமுகவின் தோல்விக்குப் பொறுப்பேற்று துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி. சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்து முடிந்த அடுத்த சில நாட்களில் 1991 ஆகஸ்ட் 24 அன்று காங்கேயம், துறைமுகம், எழும்பூர், முசிறி நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

ராஜீவ் மரணத்தின் அரசியல் தாக்கம் குறைந்திருந்தது. எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி, துறைமுகம் தொகுதியில் திமுகவின் செல்வராசன், காங்கேயம் தொகுதியில் அதிமுகவில் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், முசிறி தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலு ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஒரு மரணம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அரசியலையே மாற்றி விட்டது என்பதற்கு உதாரணம் 1991ல் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள்.!

(ஆடுபுலி ஆட்டம் தொடரும் )

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *