கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? – விஜய்க்கு செந்தில் பாலாஜி பதில்; நிமிட வாரியாக விவரிப்பு | Karur stampede tragedy Senthil Balaji explains with video evidence

1378404
Spread the love

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்தும், தவெக தரப்பிலும், விஜய் தரப்பிலும் எழுப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வீடியோக்களை பகிர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் திரண்டது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடு அற்ற கூட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

41 உயிர்கள் பறிபோன கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியது: “கரூரில் மிகப் பெரிய துயரம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் முதலில் 116 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதில் 108 பேர் சிகிச்சைகளுக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5 பேர் கரூர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் துயருக்கு பின்னர், அதற்கான மீட்புப் பணியையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும் கவனித்து வந்தோம். அதனால்தான் 3 நாட்களுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறோம். 41 பேர் உயிரிழந்ததில், 31 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், அதாவது 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வகையிலும் நான் நேரடியாக அந்தக் குடும்பங்களுடன் தொடர்பில் உள்ளவன். இதில் சில குடும்பங்களுக்கு நான் ஏற்கெனவே சில தேவைகளை செய்து கொடுத்துள்ளேன். எனவே இச்சம்பவத்தை அரசியல் ரீதியாக அணுக விரும்பவில்லை.

தவெக கேட்ட லைட் ஹவுஸ், உழவர் சந்தை போன்ற பகுதிகளில் இட வசதி போதாது என்பதால், வேலுசாமிபுரம் கொடுக்கப்பட்டது. எங்கள் கட்சியில் எவ்வளவு கூட்டம் வரும் என கூட்டத்துக்கு ஏற்ற மாதிரிதான் இடத்தை தேர்வு செய்வோம். எனவே, அரசியல் கட்சிகள்தான் கூட்டத்துக்கு தகுந்த மாதிரி இடத்தை கேட்க வேண்டும். நாங்கள் சமீபத்தில் முப்பெரும் விழா நடத்தினோம். அதில் இரண்டரை லட்சம் பேர் பங்கேற்றார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் தனியார் இடத்தை தேர்வு செய்தோம். அவர்களுக்கு குடிநீர், உணவு கொடுத்தோம். ஆனால் வேலுசாமிபுரத்தில் கூட்டம் முடிந்த பின்னர் செருப்புகள்தான் கிடந்தன. காலி தண்ணீர் பாட்டில்கள்தான் எதுவும் கிடந்ததை பார்த்தீர்களா?

கரூர் சம்பவத்தில் எல்லா தொலைக்காட்சியும், யூடியூப் சேனல்களும் லைவ் செய்து கொண்டிருந்தார்கள். எனவே, அப்போது யாரும் சதி செய்திருந்தால் தெரியாமல் போயிருக்குமா? 25 ஆயிரம் பேர் இருக்கும் கூட்டத்தில் சிலரால் அசாதாரண சூழலை உருவாக்க முடியுமா? அது சாத்தியமா?.

ஜெனரேட்டர் ரூமில் தகரத்தை உடைத்ததால்தான், அந்த கட்சியினரே ஜெனரேட்டரை ஆஃப் செய்தனர். இதனால் அவர்கள் ஏற்பாடு செய்த போகஸ் லைட்கள் மட்டுமே ஆஃப் ஆனது. விஜய் பேசும்போது, கீழே இருந்த சிலர் தண்ணீர் பாட்டில்களையும், உதவிகளையும் தொடர்ந்து கேட்டனர். ஒருவர் தொடர்ந்து தண்ணீர் கேட்கும் வீடியோ தொலைக்காட்சி லைவ்வில் தெரிகிறது. கீழே இருந்த சிலரின் உதவி கோரிக்கைகள் அவரது கவனத்துக்கு செல்லாததால், கவனத்தை ஈர்க்க செருப்பு வீசியிருக்கலாம்.

ஒரு கூட்டத்துக்கு வரும்போது தலைவர் முன் இருக்கையில் இருந்து கையை அசைப்பது வழக்கம். ஆனால் கரூர் கூட்டத்துக்கு வரும்போது, 500 மீட்டர் முன்பாகவே விஜய் வாகனத்தின் உள்ளே சென்று விட்டார், லைட்டை அணைத்து விட்டார். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், வாகனத்தை கொஞ்சம் முன்னாலேயே நிறுத்த காவல் துறையினர் சொல்லியுள்ளனர். அதனையும் அவர்கள் கேட்கவில்லை.

அதுபோல கரூர் எல்லையிலிருந்து விஜய் மக்களை பார்த்து கையசைத்தவாறே வந்திருந்தால், அங்கேயே மக்கள் அவரை பார்த்துவிட்டு சென்றிருப்பார்கள், கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது என்பது மக்களின் கருத்து. எல்லா மக்களையும் விஜய் பேசும் இடத்துக்கு வரவழைக்க இதுபோல செய்யப்பட்டதா என்பது பொதுமக்களின் சந்தேகமாக உள்ளது. எங்களிடம் இதுபோல பல கேள்விகளை கேட்கிறீர்கள். ஆனால் தவெக தரப்பில் யாரும் இது குறித்து பேச முன்வரவில்லை.

எல்லா ஊரிலும் கூட்டம் நடத்தினேன், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என கேட்கிறார்கள். அதாவது, ‘எல்லா நாளும் மிக வேகமாக வண்டி ஓட்டுவேன், விபத்து நடக்கவில்லை. ஆனால், இன்று மட்டும் எப்படி விபத்து நடந்தது’ என ஒருவர் கேட்பது போல உள்ளது.

கூட்ட நெரிசல் இருப்பதால் முன்னாலேயே நின்று பேச காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் எதையும் கேட்கவில்லை. எந்த கட்டுப்பாடுகளையும் மதிக்கவில்லை. என் பெயர் சொல்லும்போதுதான் செருப்பு வீசப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால், விஜய் மொத்தம் 19 நிமிடம்தான் வாகனத்துக்கு மேலே இருந்தார். அவர் பேச ஆரம்பித்து 3-வது நிமிடத்தில் என்னைப் பற்றி பேச ஆரம்பித்து உடனே அதை நிறுத்திவிட்டு, என்னைப் பற்றி பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு தேர்தல் வாக்குறுதி தொடர்பாக பேசினார்.

விஜய் பேச ஆரம்பித்த 6-வது நிமிடத்தில் மயங்கி விழுந்தவர்களின் பகுதியிலிருந்து முதல் செருப்பு வீசப்பட்டது, பின்னர் சில நொடிகளில் மற்றொரு செருப்பு வீசப்பட்டது. 7-வது நிமிடத்தில் விஜயின் உதவியாளர், நிறைய பேர் மயக்கமடைவதாக அவரிடம் சொல்கிறார்கள். அவரின் பாதுகாவலர்கள் 14-வது நிமிடத்தில் நிலைமை மோசமடைந்ததை சொல்கிறார்கள். 16-வது நிமிடத்தில்தான் என்னை குறித்து அவர் பாட்டுப் பாடி பேசினார். இதுதான் உண்மை. என்னைப் பற்றி 16-வது நிமிடத்தில் பேசுகிறார், ஆனால், 6-வது நிமிடத்திலேயே செருப்பு வீசிவிட்டார்கள்.

ஒரு துயரம் நடந்துள்ளது, அதில் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் அல்லது அதனை திருத்திக்கொள்ள முயற்சி எடுக்காமல், தங்கள் தவறுகளை அரசின் மீது திருப்பும் வகையில் வதந்திகளை பரப்புகிறார்கள். விஜய் வாகனத்தோடு 2 ஆம்புலன்ஸ்கள் வந்தது, 5 ஆம்புலன்ஸ்களை தவெகவினர்தான் ஏற்பாடு செய்திருந்தனர். அதுதான் அங்கே சென்றது. தண்ணீர் பாட்டிலில் என் பெயர் ஸ்டிக்கர் உள்ளதை சொல்கின்றனர். நள்ளிரவில் தண்ணீர் பாட்டில்கள் வெளியில் போதுமான அளவு கிடைக்கவில்லை. அதனால், எங்களிடம் உள்ள தண்ணீர் பாட்டில், உணவுகளை எடுத்துக் கொடுத்தோம். இப்படி குறை சொல்பவர்கள், தண்ணீர் ஏற்பாடு செய்து தந்திருக்க வேண்டியதுதானே?.

உண்மை இப்படி இருக்க, காழ்ப்புணர்ச்சியோடு சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புகிறார்கள். எப்படி பாதிக்கப்பட்ட உடனே மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி என்றார் என்று கேட்கிறார்கள். நான் சம்பவத்தன்று கட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் இருந்தேன். எனக்கு அசம்பாவிதம் குறித்து தகவல் தெரிந்த உடனே அமராவதி மருத்துவமனைக்கு சென்றேன். நான் சென்ற சிறிது நேரத்தில் அதிமுக மாவட்ட செயலாளரும் வந்தார். மக்கள் பாதிக்கப்பட்ட தகவல் தெரிந்தவுடன், யாருக்கும் உதவி செய்யாமல் டிக்கெட் போட்டு சென்னைக்கு செல்ல சொல்கிறீர்களா?

கரூருக்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடு அற்ற கூட்டம். ஏனெனில் சில நாட்களுக்கு முன்பு வேலுசாமிபுரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஏன் அவ்வளவு பேர் அங்கே நிற்க முடியாதா? எந்த கட்சியிலும் கூட்டத்தை நிர்வகிக்க 2-ம் கட்ட தலைவர்கள் இருப்பார்கள். தவெகவில் அது நடந்தா என்பதை மக்களே பார்க்க வேண்டும். கரூருக்கு வந்த பாஜக உண்மை கண்டறியும் குழு மணிப்பூர், கும்பமேளா விபத்து, குஜராத் பால விபத்து நடந்த பகுதிகளுக்கும் சென்று விசாரணை செய்திருக்கலாம்” என்று செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *