கரூர்: மழையால் சேதமடைந்த புதிய பகுதிநேர ரேஷன் கடைப் பாதை உடனடியாக சீரமைக்கப்பட்டது. கடையை திறந்து வைத்து, பொருட்களை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள், புதிய பகுதிநேர ரேஷன் கடை, புதிய தார் சாலை பணிகள் உள்ளிட்ட ரூ.4.21 கோடியிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளை தொடங்கி வைக்கும் விழா இன்று (அக்.23-ம் தேதி) நடைபெற்றது.
கரூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி நத்தமேட்டில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் உள்ள நாடக மேடையில் தற்காலிகமாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டிருந்தது.
இப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் பகுதி நேர கடை திறக்கப்பட உள்ள நாடக மேடைக்கு செல்லும் வழி சேறும், சகதியுமாக மாறியிருந்தது. இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் இருந்து சேறு மண் வெட்டி மூலம் அகற்றப்பட்டு, பொக்லைன் மூலம் கிராவல் மண் கொட்டப்பட்டு, தார் பாய் விரிக்கப்பட்டு பகுதி நேர ரேஷன் கடைக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டது.
இதனால் விழா நடைபெறும் இடத்திற்கு சுமார் 24 நிமிடங்கள் தாமதமாக வந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அங்கு ஆரத்தி எடுக்க திரண்டிருந்த பெண்கள் நெற்றியில் திலகமிட்டதை ஏற்று, ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் புதிய பகுதிநேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து, குத்து விளக்கேற்றி, ரேஷன் பொருட்களை வழங்கினார்.
அரவக்குறிச்சி எம்எல்ஏ ரா.இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கரூர் கோட்டாட்சியர் முகமதுபைசல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன் வட்டாட்சியர்கள் மோகன்ராஜ், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து காந்தி நகர் பிசி குடியிருப்பு பகுதியில் ரூ.45.44 லட்சம், பட்டியலின குடியிருப்பு பகுதியில் ரூ.62.70 லட்சத்தில் தார் சாலையினை பலப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிற பகுதிகளிலும் பணிகளை தொடங்கி வைத்தார்.