கரூரில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு: போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் வாக்குவாதம் | Karur stampede: CBI holds inquiry for the second day

Spread the love

கரூர்: கருர் வேலுச்சாமிபுரத்தில் இன்று காலை இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் 3டி ஸ்கேனர் உதவியுடன் காலை 7 மணி முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு நடைபெறும் இடம் இடம் கரூர் ஈரோடு சாலை என்பதால் அப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர். இதனால் மக்கள் போலீஸாருடனும், சிபிஐ அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து குஜராத்தை சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17-ம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமி புறத்தைச் சேர்ந்த கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து காலையில் வேலுச்சாமி புரத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு நவீன கருவியான 3டி லேசர் ஸ்கேனருடன் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் கரூர் ஈரோடு சாலையில் முனியப்பன் கோயிலில் இருந்து கோதூர் பிரிவு சாலை வரை தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடனர். தொடர்ந்து அங்கு பாரா போக்கஸ் என்னும் 3d ஸ்கேனர் கருவியுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அப்பகுதியில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் சம்பவம் நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் தங்களது கடைகளில் சிசி டிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தால் கேமராவில் பதிவான பதிவுகளை தங்களிடம் வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து மாலை 5.30 மணி வரை அதிகாரிகள் விசாரணை மற்றும் ஆய்வுகள் மேற்கொண்ட பின்னர் தாங்கள் தங்கியிருக்கும் பொதுப்பணி துறையின் சுற்றுலா மாளிகைக்கு சென்றனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை 7 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமி புரத்திற்கு சென்று வெள்ளிக்கிழமை நடத்திய ஃபாரோபோக்கஸ் கருவி மூலம் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். கரு வழக்கில் எஸ்ஐடி குழு மற்றும் தனி நபர் குழு மற்றும் பொதுமக்கள் அளித்த பல்வேறு வாக்குமூலங்கள் அடிப்படையிலும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலும் அவற்றினை ஒப்பீடு செய்வதற்காக சிபிஐ அதிகாரிகள் வீடியோ ஆதாரங்களை மிகத் துல்லியமாக ஒப்பீடு செய்யும் 3டி லேசர் ஸ்கேனர் கருவியை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் வாக்குவாதம்: சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்தினை அங்குலம் அங்குலமாக 3டி ஸ்கேனர் லேசர் கருவியுடன் அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் பணிகள் மேற்கொள்ளும் இடம் கரூர் ஈரோடு சாலை என்பதால் அப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

இதனால் அலுவலகங்கள் மற்றும் வேலைக்கு விரைவில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டதால் தடுப்பு வேலியை அகற்றுமாறு சிபிஐ அதிகாரிகள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்து மாற்று வழியாக கோவை சாலைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *