கரூர்: கரூரில் விஜய் பங்கேற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்சநீதிமன்ற உதரவுப்படி, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்வேறு துறை அரசு அலுவலர்கள், சம்பவம் நடந்த பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள், நேரடி சாட்சிகள் என 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2-ம் தேதி 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட வாகனத்தில் உள்ள கேமரா பதிவு காட்சிகளை அளிக்குமாறு, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நேற்று முன்தினம் சம்மன் அளித்தனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்த செப். 27-ம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூர் நகர போலீஸார் மற்றும் பிற காவல் நிலைய போலீஸார் என 10-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் விசாரனை நடத்தப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.