கரூர்: கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் 11 நாட்களுக்குப் பின் மீண்டும் வந்தனர். தொடர்ந்து விசாரணையை தொடங்கினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் கடந்த 15-ம் தேதி கரூர் வந்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணையை தொடங்கினர். சிறப்பு புலனாய்வு குழு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புக் குழுவினர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் ஆவணங்கள் மற்றும் விசாரணை நிலை அறிக்கையை ஒப்படைத்தனர். பின்னர் மறுநாள் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த 18-ம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பட் முன்னிலையில் எஃப் ஐ ஆர் தாக்கல் செய்தனர். அதில் முதல் குற்றவாளியாக கரூர் மாவட்ட தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். இதனிடையே இந்த எஃப்ஐஆர் நகலை தவெக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பெற்றுக் கொண்டனர்.
இதனிடையே நீதிமன்றத்தில் எஃப் ஐ ஆர் தாக்கல் செய்த பின் சிபிஐ அதிகாரிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். கரூரில் காவல் ஆய்வாளர் மனோகரன் மற்றும் 3 பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மட்டும் கரூரில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏழு பேர் கொண்ட குழுவினர் மீண்டும் கரூருக்கு வியாழக்கிழமை காலை அவர்கள் தங்கி இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணி துறையின் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்களுக்குள் ஆலோசனை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக தங்களது கார்களில் புறப்பட்டு சென்றனர்.