கரூர்: கரூர் ஆர்டிமலையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. 780 காளைகள், 480 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார், சிறந்த மாடு பிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்டிமலையில் (ராச்சாண்டார் திருமலை)யில் கிராம பொதுமக்கள் சார்பாக 63ம் ஆண்டு ஜல்லிகட்டு விழா இன்று (ஜன.16-ம் தேதி) காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
ஜல்லிக்கட்டு குழு தலைவர் சங்க கவுண்டர் தலைமை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். ஆட்சியர் மீ.தங்கவேல், காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, திட்ட இயக்குர் ஸ்ரீலேகா, குளித்தலை எம்எல்ஏ ரா.மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
780 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 480 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த காளைக்கு கார், சிறந்த மாடுபிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி காளை வெள்ளையன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரில் களமிறக்கப்பட்டது. அந்த காளை யாரிடமும் பிடிபடாததால் காளை உரிமையாளருக்கு தங்கக் காசு பரிசாக வழங்கப்பட்டது.
ஏடிஎஸ்பிக்கள் பிரேம்ஆனந்த், ஜெயசந்திரன் ஆகியோர் தலைமையில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீஸார், ஆயுதப்படையினர், ஊர்க்காவல் படையினர் என 306 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் இருந்தனர்.