கரூர் உடற்கூராய்வு குறித்து இபிஎஸ் எழுப்பிய சந்தேகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Karur Stampede: Ma.Subramanian explains on post mortem issue raised by EPS

1379867
Spread the love

சென்னை: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்னர் ஆட்சியர் அனுமதியுடனேயே நள்ளிரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. கூடுதலாக மருத்துவர்கள் வரவழைகப்பட்டனர். கூடுதல் மேஜைகளும் அமைக்கப்பட்டது.” என்று உடற்கூராய்வு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

முதல்வர் சொன்னக் காரணம்! சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று, கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர், “செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்.” என்று கூறியிருந்தார்.

இபிஎஸ் கேள்வி… இந்நிலையில், இது குறித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூருக்கு முன்னதாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்திருக்கிறார். அப்போது கூடிய கூட்டத்தை வைத்தே கரூரில் விஜய் பிரச்சாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்து காவல்துறை, உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தாலே, அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி. உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் மா.சு. விளக்கம்… இதற்கு விளக்கமளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கரூர் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 2 உடற்கூராய்வு மேஜைகள் இருந்தன. கூடுதலாக 3 மேஜைகள் அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும், அவசர நிலையைக் கருதி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே நள்ளிரவில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. அடுத்த நாள் மதியம் வரை 39 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 14 மணி நேரம் உடற்கூராய்வு நடந்தது. கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, மொத்த 25 மருத்துவர்கள் உடற்கூராய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.” என விளக்கமளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *