பழநி: “கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று மக்களுக்கு தெரியாதா? யார் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும்” என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமிழக பாஜக புதிய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று (அக்.11) மாலை நடைபெற்றது. இதில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது: “2026 ஏப்.20-ம் தேதிக்கு மேல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். ஜனவரி 10-ம் தேதிக்கு மேல் கூட்டணி கட்சிகள் குறித்து தீர்மானித்து முடிவு எடுக்கப்படும். பாஜகவில் சாதாரண அடிமட்ட தொண்டன் கூட மாநில தலைவர் பதவிக்கு வர முடியும்.
தற்போது தேர்தல் காலக்கட்டம். ஜனவரிக்குள் இன்னும் நிறைய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரும். திமுக பெரிய கூட்டணி வைத்து வெற்றி பெறுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது விசிகவுக்கும் திமுகவுக்கும் நிறைய பிரச்சினைகள் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடருமா என்பது சந்தேகம் தான். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு ஏற்கெனவே கொடுத்ததை விட இன்னும் 2 சீட்டுகள் குறைவாக கொடுக்க இருப்பதாக செய்தி வருகிறது. அதனால், எந்தெந்த கட்சிகள் திமுக கூட்டணியில் தொடரும் என்பது தெரிய வில்லை.
மூன்று, நான்கு என எத்தனை அணிகளாக தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்பது தெரியாது. எத்தனை அணிகளாக இருந்தாலும் வெற்றி பெறப்போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான். திமுக கூட்டணி பற்றியோ, திமுக வாக்குக்கு பணம் கொடுப்பதை பற்றியோ கவலைப்பட வேண்டாம். ஆட்சி மாற்றத்துக்கு எதிராக போர் வரும்போது எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் திமுக வெல்ல முடியாது.
ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் திமுக செய்தது முதல்வர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டுமே. முதல்வரின் மருகமன் சபரீசன் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
யாரைப் பற்றியும் தவறாக வாட்ஸ்ஆப்பில் போட வேண்டாம். எதுவாக இருந்தாலும் நேரில் சென்று பேசுங்கள். நேர்பட பேசுங்கள். திமுகவோ அல்லது எந்த கட்சியாக இருந்தாலும் சரி அவர்களை பற்றி வாட்ஸ்ஆப்பில் போட வேண்டாம். இதனை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறேன். திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம், சாதாரண விபத்தில் இறந்தால் ரூ.2 லட்சம் மட்டுமே நிவாரணமாக கொடுக்கிறது. இது என்ன ஆட்சி?.
ஆட்சிக்கு வந்ததும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று கூறினர். தற்போது விடுபட்ட பெண்களுக்கும் கொடுப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று மக்களுக்கு தெரியாதா? யார் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும்.
பாஜகவினர் எங்கு சென்றாலும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சொல்ல வேண்டும். அவரது பெயரை சொன்னாலே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவருடைய ஆட்சி தமிழகத்துக்கு வருவதற்கு ஒவ்வொருவருடைய பங்கும் முக்கியம்” என்று அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், இளைஞரணி மாநில தலைவர் சூர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறும்போது, “எத்தனை அணிகள் தேர்தலை சந்தித்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றிப் பெறும். நாளை (அக்.12) தேதி மதுரையில் பாஜக சார்பில் எழுச்சிப் பயணம் தொடங்க உள்ளது. தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணத்தில் நான்கரை ஆண்டுகளில் திமுக என்னென்ன வாக்குறுதிகள்? மக்களுக்கு கொடுத்தது. கொடுத்த வாக்குறுதியில் எதுவுமே செய்யவில்லை என்பதை மக்களிடம் எடுத்து சொல்லப் போகிறோம்.
மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கமாக இருக்கிறது. திமுக ஆட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகள் கூண்டுக்குள் தான் இருக்கின்றன. முதலில் கூண்டுகளை எடுக்க வேண்டும். பாரம்பரியாக உள்ள பெயர்களில் சாதிப் பெயரை மாற்றுவது என்பது சரியாக இருக்காது” என்றார்.