கரூர் சம்பவத்துக்கு பின் விஜய் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டார்: உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம் | He was directed to leave the place for the benefit of public order: TVK in SC

1379312
Spread the love

புதுடெல்லி: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் (விஜய்) அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.” என உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதிடப்பட்டது.

கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசா​ரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலை​மை​யில், சிறப்பு புல​னாய்வு குழு அமைத்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், “இந்த வழக்கில் மாநில காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்து தவெக சார்பில் ஏற்கனவே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகளைக் கொண்டே விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பாரபட்சமாக செயல்படுகிறது.

‘சம்பவ இடத்தில் இருந்து கட்சித் தலைவர் விஜய் தப்பி ஓடிவிட்டார்’ என்றும், ‘நடந்த சம்பவத்துக்கு விஜய் வருத்தம் தெரிவிக்கவில்லை’ என்றும் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் ஏற்கனவே விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. தவெக பேரணியில் பிரச்சினையை உருவாக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி நடந்திருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்ரதவிட வேண்டும்” என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதேபோல், கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து பாஜகவின் உமா ஆனந்தன் கடந்த 7ம் தேதி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம், “உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தவெக இணைக்கப்படவேயில்லை. எங்களுக்கு உரிய வாய்ப்பளிக்காமல், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறவிட்டதாக உயர் நீதிமன்றம் எங்கள் மீது குற்றம் சாட்டியது. தவெக தலைவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டதாகவும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் (விஜய்) அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அக்.3-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, கூட்டத்தைக் கட்டுப்படுத்த நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுக்கக் கோரும் மனுவை அடிப்படையாகக் கொண்டது” என வாதிட்டார். தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *