சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டம், முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டோடு நடைபெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
அப்போது, தவெக நடத்திய பிரச்சார கூட்டத்தையும் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய பிரச்சார கூட்டத்தையும் ஒப்பிட்டுப் பேசினார். அவர் தனது உரையில், “கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய கடிதத்தில் கூட்டம் நடத்த மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என தவெக நிர்வாகிகள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சியின் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால், கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கினார்.
செப். 27ம் தேதி அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார். அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் கடந்துதான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இங்கே, அனைத்து கட்சிகளைச் சார்ந்தவர்களும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவை அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை, உணவு ஏற்பாடும் ஏற்பாட்டாளர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியே செல்ல முடியவில்லை.
சம்பவம் நடந்த அதே வேலுசாமிபுரத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பாக அதாவது செப்.25ம் தேதி எதிர்க்கட்சித் தலைவரின் பரப்புரை நடந்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தது. அதில் சுமார் 12,000 முதல் 15,000 வரை பங்கேற்றிருக்கிறார்கள். அந்த பரப்புரைக்கூட்டத்திற்கு சுமார் 137 காவலர்கள், 30 ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்கு நேர் மாறாக இந்த கட்சியினுடைய நிகழ்ச்சி நடந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.