கரூர் சம்பவம்: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு அமைத்தது பாஜக | BJP announces delegation of MPs led by Hema Malini to meet Karur incident victims in person

1378208
Spread the love

புதுடெல்லி: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து ஆராயவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கவும் 8 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார். ஹேமமாலினி எம்பி தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த சூழ்நிலை குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விரைவாக அறிக்கை அளிப்பதற்காக 8 பேர் கொண்ட ஒரு குழுவை ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த இக்குழு, விரைவில் கரூருக்கு வருகை தரும்.

குழுவின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி இருப்பார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் (முன்னாள் டிஜிபி), ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவ சேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புட்ட மகேஷ் குமார் (தெலுங்கு தேசம் கட்சி) ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *