கரூர் சம்பவம் 5 மணி நேர விசாரணை: அடுக்கடுக்கான கேள்விகள், விஜய் திணறல் – Kumudam

Spread the love

இன்று காலை 10.15 மணியளவில் விசாரணைக்கு ஆஜரான விஜய்யிடம், விபத்து நடந்த அன்று அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர். குறிப்பாக, கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அறிந்த பின்னரும் பிரசாரத்தைத் தொடர்ந்தது ஏன்? அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் மக்கள் கூடியதை நிர்வாகிகள் கவனிக்கவில்லையா? என்றும், வாகனத்தில் ஏறி நின்றபோது உங்கள் கண் முன்னால் நடந்த நெரிசலை நீங்கள் கவனிக்கவில்லையா? 

அவ்வளவு நெருக்கடி நிலவிய சூழலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன்? மக்கள் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியபோது அங்கிருந்த அபாயகரமான சூழல் தெரியவில்லையா? போன்ற சங்கடமான கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய், “நான் தமிழக காவல்துறையை முழுமையாக நம்பினேன். அவர்களின் வழிநடத்தலின் படியே எனது பயணம் அமைந்தது” என்று ஓரிரு வரிகளில் பதிலளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளித்த அவர், சில முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடுதல் அவகாசம் கோரியதாகவும் சொல்லப்படுகிறது.

சுமார் 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு மாலை 3.30 மணியளவில் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். அவர் இன்று இரவு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் அடுத்த மாதம் (பிப்ரவரி) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. 

இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில், தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரும் சேர்க்கப்படலாம் என்ற தகவல் தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய்யிடம் நடத்தப்பட்ட இந்த இரண்டாவது விசாரணை வழக்கில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. விஜய்யின் பதில்களில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிய சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அவரை அழைக்க வாய்ப்புள்ளதாகவும் டெல்லி சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *