கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – தீர்ப்பின் முழு விவரம் | Supreme court orders CBI probe on Karur Stampede case

1379669
Spread the love

புதுடெல்லி: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அதேபோல, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ மற்றும் சாலைப் பிரச்சாரங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுகளை எதிர்த்து தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் பிச்சைமுத்து, எஸ்.பிரபாகரன், செல்வராஜ், பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த வார இறுதியில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது, தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், சி.ஆர்யமா சுந்தரம் ஆகியோரும், தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி,வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோரும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, டி.எஸ்.நாயுடு, வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசனும் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: கரூர் துயரச் சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள்கூட உயிரைப் பறிகொடுத்திருப்பது நாட்டின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மனுதாரர்கள் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் அரசியல் ரீதியாக மாறி மாறி குற்றம் சாட்டப்படுகின்றன. உயிரிழப்பு சம்பவத்தில் நியாயமான, உண்மையான, பாரபட்சமற்ற, வெளிப்படையான, சுதந்திரமான விசாரணையை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. எனவே, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் அடங்கிய கண்காணிப்பு

குழுவையும் அமைக்கிறோம்.

சிபிஐ இயன்ற அளவுக்கு விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும். கண்காணிப்புக் குழு மற்றும் சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர, மூத்த அதிகாரி ஒருவரை நோடல் அதிகாரியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 8 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அவர்களிடம் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆஜராகி, ‘‘சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த மோசடி குறித்தும் விசாரிக்க வேண்டும்’’ என்று முறையிட, ‘‘அதுகுறித்து பரிசீலிக்கப்படும்’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒருநபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு கலைப்பு: நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியுள்ளதாவது: கரூர் நெரிசல் உயிரிழப்பு வழக்கில் தமிழக அரசு தரப்பி்ல் முன்னாள் நீதிபதி தலைமையிலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலும் தனித்தனியாக விசாரணை என்பது தேவையற்றது. இதுபோன்ற விசாரணைகள் குழப்பத்துக்குத்தான் வழிவகுக்கும். உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரி்த்து வரும் போது, சென்னையில் வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி தனது அதிகார எல்லைக்குள் வராத வழக்கை தனி நீதிபதி விசாரித்து, சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது தன்னிச்சையானது. தவெக எதிர்தரப்பாக இல்லாத நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி இந்த வழக்கை கிரிமினல் ரிட் மனுவாக விசாரித்தது குறித்து உயர் நீதிமன்ற பதிவுத் துறை விளக்கம் அளிக்க வேண்டும். உயர் நீதிமன்ற மதுரை கிளையும், சென்னை உயர் நீதிமன்றமும் இந்த சம்பவம் தொடர்பாக மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ளன.

தமிழக அரசு நியமித்த ஒருநபர் ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு உடனடியாக கலைக்கப்படுகிறது. அவர்கள் இதுவரை நடத்தி சேகரித்த அனைத்து ஆதாரங்கள், டிஜிட்டல் ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல, கரூர் எஸ்.பி. மற்றும் கரூர் டவுன் காவல் ஆய்வாளர் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளையும் சிபிஐக்கு வழங்கி, சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *