சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையிலான சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. கரூர் விபத்தின் பின்னணியில் பல்வேறு சதி வலைகள் இருப்பதாக ஐயங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் மிகவும் துயரமானவை. காவல்துறையினர், பரப்புரைக் கூட்டத்திற்கு வந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடமைகளை மறந்து பொறுப்பின்றி செயல்பட்டது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கம் முதலே கூறி வருகிறது. ஆனால், விபத்து நடந்த சில நிமிடங்களில் தமிழக அரசின் சார்பில் காட்டப்பட்ட அளவுக்கு அதிகமான பதற்றம், விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே , காவல்துறை சார்பில், தங்கள் மீது இதில் எந்தத் தவறும் இல்லை என்று தாமாக முன்வந்து அளிக்கப்பட்ட விளக்கம் ஆகியவை தான் இந்த விபத்தின் பின்னணியில் சதி வேலைகள் இருக்குமோ? என்ற ஐயத்தை வலுப்படுத்தியது.
அதனால் தான் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று செப்டம்பர் 29-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி மேற்பார்வையில் விசாரணை நடத்த ஆணையிட்டிருப்பதன் முலம் இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நம்புகிறது.
உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ள இந்த விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டும் தான் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்கு நீதியை வென்றெடுத்துக் கொடுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.