கரூர்: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.26-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில், உயர் நீதிமன்றம் அக்.3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது. அக்.5-ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அக்.13-ம் தேதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து, அக்.16-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்தனர். அக்.17-ம் தேதி சிபிஐயிடம் வழக்கு ஆவணங்களை எஸ்ஐடி ஒப்படைத்தது. அக்.19-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சிலர் தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், இன்ஸ்பெக்டர் நிலையிலான அதிகாரி கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி எஸ்ஐடி ஒப்படைத்த ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், சிபிஐ-யில் இருந்து கரூர் நீதிமன்றத்துக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மாஜிஸ்ட்ரேட் சார்லஸ் ஆல் பர்ட்டிடம் சிபிஐ அதிகாரிகள் இந்தக் கடிதத்தை இன்று (அக்.23) ஒப்படைத்தனர். குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் விடுப்பு என்பதால் அக்கடிதம் நீதிமன்றம் 2-ல் ஒப்படைக்கப்பட்டது. கடிதம் பிரித்து பார்க்கப்படாததால் அந்தக் கடிதத்தில் உள்ள விவரங்கள் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.