கரூர் பலிக்கு தவெக பக்கமும் தவறு இருக்கிறது, தமிழக அரசு பக்கமும் கவனக் குறைவு இருக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முழுக்க அரசியல் பொதுக்கூட்டங்கள், மாநாடு நடைபெறுகிறது. ஆனால் இதுவரைக்கும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இப்படி ஒரு உயிர்ச்சேதம் எங்கும் நடைபெறவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களையும் நேரில் சந்தித்தேன்.
அனைவரும் கூறுவது அங்கு குறுகலான பாதை, உரிய பாதுகாப்பு யாருக்கும் தரப்படவில்லை. விஜய் வாகனம் கூட்டத்தை நெருங்கி வரவர கூட்ட நெரிசல் அதிகமாகி உள்ளது. அந்த இடத்தில் போலீஸ் லேசான தடியடி நடத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிறையபேர் கீழே விழுந்ததால் உயிர்பலி ஏற்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ்கள் வரிசையாக வருகின்றன. விஜய்யே சொல்கிறார், ‘என்ன, நம் கட்சி கொடியோட ஆம்புலன்ஸ் வருகிறதே’ என்று.
அந்த ஆம்புலன்ஸ்கள் யாருடையது? இதுக்கெல்லாம் அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். இதற்கு யார் பொறுப்பேற்பது?. குறுகலான பாதையில் அரசு அனுமதி தரலாமா. பெரிய மைதானத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். சிகிச்சை பெறுபவர்களிடம் கேட்டதற்கு, காலதாமதம், குறுகலான பாதை, கரூர் பவர் கட், போலீஸ் தடியடி, தவெக கொடியுடன் ஆம்புலன்ஸ் ஆகிய காரணங்களால்தான் உயிர் பலி ஏற்பட்டிருக்கிறது. தவெகவும் இதை உணர வேண்டும்.