சி.பி.ஐ தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களை த.வெ.க சார்பில் கரூர் வேலுச்சாமிபுரம் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முழு வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள் மற்றும் ட்ரோன் கேமரா காட்சிகள் உள்ளிட்டவை சி.பி.ஐ தற்காலிக அலுவலகத்தில் கடந்த 8 -ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பொதுச்செயலாளர் ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 5 பேர் சி.பி.ஐ விசாரணைக்கு, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஆஜராகினர். இரவு 8 மணி வரை சுமார் 10 மணி நேரம் அவர்களிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக சொல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று(25-11-2025) காலை 10 மணி அளவில் இரண்டாவது நாளாக சி.பி.ஐ அலுவலகத்திற்கு, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணை செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 4 பேரும் ஆஜராகினர்.
சி.பி.ஐ ஏ.எஸ்.பி முகேஷ் குமார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் த.வெ.க-வைச் சேர்ந்த சிலர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று விசாரணைக்காக இரண்டாவது நாளாக ஆஜராகினர்.