Last Updated : 15 Feb, 2025 04:37 PM
Published : 15 Feb 2025 04:37 PM
Last Updated : 15 Feb 2025 04:37 PM

கரூர்: நீதிமன்ற உத்தரவை அடுத்து கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கியது.
கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் கரூரின் தற்போதைய பேருந்து நிலையமான முத்துகுமாரசாமி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. பெருகிவரும் வாகனங்கள், அதிகரிக்கும் பயணிகள் காரணமாக கடந்த 2002-ம் ஆண்டு முதல் கரூர் பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதற்காக தொடக்க காலத்தில் சேலம் புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
அதன்பின் கடந்த 2009-ம் ஆண்டு கரூர் சுக்காலியூரில் புதிய பேருந்து நிலையம் கட்ட கரூர் நகராட்சியாக இருந்தபோது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தனியார் தானமாக வழங்கிய 12 ஏக்கரில் கரூர் புதிய பேருந்து நிலையம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அங்கு பேருந்து நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. அதன்பிறகு கடந்த 2020-ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கரூர் தோரணக்கல்பட்டியில் கூடுதல் நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் திருமாநிலையூரில் ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடங்கின. பேருந்து நிலைய கட்டுமான பணிக்காக கால்வாய்களை சேதப்படுத்தியதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து கரூர் மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையத்தை கட்டவேண்டும் என பலர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இவ்வழக்கு விசாரணையில் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு கட்டுமான பணிகளை தொடங்கலாம் என நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து கரூர் திருமாநிலையூரில் நீண்ட காலமாக பூட்டப்பட்டிருந்த புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் நுழைவாயில் இன்று (பிப். 15) திறக்கப்பட்டது. பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் ஒப்பந்த நிறுவனம் 5-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை சுற்றி சீரமைக்கும் பணிகளைத் தொடங்கினர். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
FOLLOW US
தவறவிடாதீர்!