இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸார், அவர்களது உடலைக் கைப்பற்றி, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, குளித்தலை அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் போதிய குளிர்சாதன அறை இல்லாததால் அவர்களது உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் டெக்ஸ் பஸ் டிரைவர் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும், பஸ் டிரைவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், இந்தச் சம்பவத்தை அறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், லாலாபேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து மேம்பாலம் முடியும் வரை சாலையில் எந்தவித மின்விளக்குகளும் இல்லை. கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது குறுகிய இருவழிச் சாலையாக உள்ளது. இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வரும் சம்பவம் தொடர்கதையாகி வருவதாக அங்குள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஸ்கூட்டி மீது தனியார் டெக்ஸ் பஸ் மோதிய விபத்தில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.