கோவை: கரூர் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் ‘தாய்மை’ என்ற பெயரில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த திட்டத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறியதாவது: “கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக உடல் நலன் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சியும் ஊட்டச் சத்து வழங்கும் ‘தாய்மை’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளோம். தமிழகத்தை பொறுத்த வரை ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை என்றெல்லாம் கூறிக்கொண்டு இருந்தாலும், மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கான மத்திய அரசு திட்டங்களுக்கு கூட சரியான நிதி உதவியை பயன்படுத்தாமல் இருப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கின்றன.
ஒவ்வொரு துறையிலும் திட்டங்களை அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பு அதனை செயல்படுத்தும் போது முற்றிலும் அதற்கு மாறாக நடந்து கொள்வது, தேர்தல் வாக்குறுதியில் ஒன்று கொடுப்பது, ஆனால் தேர்தல் நெருங்கும் போது வேறு ஒன்று பேசுவது, இடையில் தேர்தல் வாக்குறுதிகளுக்காக போராடக் கூடிய நபர்களைக் கூட சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவது என, மக்களுக்கு எதிரான அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது.
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எனற யாத்திரையை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி உள்ளார். திராவிட மாடல் அரசு ஏன் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது குறித்து மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் இந்த பயணம் அமையும். கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை நாங்கள் வரவேற்கிறோம். நாங்களும் இதையே தான் வலியுறுத்தினோம். கரூரில் நடந்தது விபத்து என ஏற்றுக்கொள்ள முடியாது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் எத்தனை பேர் கட்சி மாறி இருக்கிறார்கள் என்பதை பற்றி நாம் பேசியாக வேண்டும். இயல்பான சூழல் கரூரில் இல்லை. எந்த ஒரு சட்ட திட்டத்திற்கும் உட்பட்ட மாவட்டமாக கரூர் இல்லை. திமுக ஆட்சி எப்போது எல்லாம் வருகிறதோ அப்போது ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கும்.
கரூர் விவகாரத்தில் உயிரிழந்த நபர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாங்கள் பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதை அரசியலாக பார்த்தால் பார்த்துக் கொள்ளுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. மேலும் வலுவான ஆட்கள் வர உள்ளனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அக்.28ம் தேதி கோவை வர உள்ளார். பல்வேறு அமைப்புகள் சார்பில் கொடிசியா வளாகத்தில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. விரைவில் மேலும் விவரங்கள் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.