சென்னை: கரூர் வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றம் என்பது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வாதங்களை கேட்ட நீதிபதிகள், இன்று அளித்த தீர்ப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
இதனிடையே, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியது: “சிபிஐ விசாரணை என்பது ஏற்புடையதல்ல, அது ஒரு மாநில உரிமைக்கு எதிரானது. தமிழ்நாடு காவல் துறை விசாரணையில் என்ன குறையை கண்டுவிட்டீர்கள்?
நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, மத்திய புலனாய்வு துறை… இவை தன்னாச்சி கொண்ட அமைப்புகள் அல்ல. அவை அனைத்தும் ஆட்சியர்களின் விரல்களை போல், அவர்கள் சொல்வதை போல் செயல்படும். சிபிஐ விசாரணை மடைமாற்ற மட்டுமே உதவும். நாளை முதல் விசாரணையை தொடங்கி, இரண்டு மாதங்களுக்குள் கரூர் வழக்கு குறித்து சிபிஐ முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துவிடுமா?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
மேலும், “கரூர் விவகாரத்தில் விசாரணை தொடங்கவே இல்லை, அதற்குள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. தவெக கரூர் வழக்கில் அஸ்ரா கர்க் தலைமையிலான விசாரணை வேண்டாம் என்று நீதிமன்றத்தில் கூறுகிறது. சிறுநீரக முறைகேடு வழக்கில் நீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவை தமிழக அரசு வேண்டாம் என்று கூறுகிறது. இதில் இருந்து மாநிலத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது என்பது தெரிகிறது” என்று சீமான் கூறினார்.